டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டதால், பாதுகாப்பு குறைபாட்டுக்கு பொறுப்பேற்று காவல் துறை தலைவர் இடாரு நாகமுரா பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஜூலை 8-ம் தேதி ஜப்பானின் நாரா நகரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக ஜப்பான் காவல் துறை தலைவர் இடாரு நாகமுரா நேற்று பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஷின்சோ அபேவின் நிகழ்ச்சியின் பாதுகாப்பு குறைபாட்டுக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்துள்ளேன். எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க அந்தந்த பகுதி காவல் துறையினர் மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும்.
பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக 4 காவல் துறை அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கிய தலைவர்களுக்கான பாதுகாப்பு விதிகளை மாற்றி அமைத்துள்ளோம். உளவுத் துறையை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.