தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அந்தப் படத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்கள் பெருகினர். மேலும், சமூக வலைதளங்களில் பல பெண்களின் க்ரஷ்ஷாகவும் மாறினார் அவர். அர்ஜுன் ரெட்டி படத்துக்கு பிறகு கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் என்று பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். தமிழில் இவர் நடிப்பில் வெளியான நோட்டா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் இவர் நடித்திருந்த லைகர் படம் நேற்று வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான லைகரில் மைக் டைசனும் நடித்திருக்கிறார். படத்தை பார்த்த ரசிகர்கள் படம் ஏமாற்றிவிட்டதாகவும், படம் படு சுமார் எனவும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இந்தச் சூழலில், விஜய் தேவரகொண்டா தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஒரு படத்துக்கு 7 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்கிய அவர், லைகர் படத்திற்கு பிறகு தனது சம்பளத்தை ரூ.25 கோடியாக உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. பிற மொழிகளிலும் தனது படங்களுக்கு வரவேற்பு இருப்பதால் அதிக சம்பளம் கேட்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நடிகர் அமீர்கானுக்கு ஆதரவாக, “உங்களின் பாய்காட் பிரச்சாரம் ஆமீர்கானை மட்டும் பாதிக்கவில்லை. படத்தில் வேலை செய்த ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் சேர்த்து பாதிக்கிறது. ஒரு படத்தில் நடிகர், இயக்குநர் மற்றும் நடிகையைத் தவிர, பல முக்கியமான கதாபாத்திரங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். 200, 300 நடிகர்கள் வேலை செய்கிறார்கள். ஒரு திரைப்படம் என்பது பலருக்கும் வேலை வாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் தருகிறது” என விஜய் தேவரகொண்டா பேசியிருந்தார்.
இதனையடுத்து லைகர் படத்தை பார்க்காமல் புறக்கணிக்க வேண்டுமென்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.