கராச்சி: பாகிஸ்தானில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு, ஜூன் 14 முதல் நேற்றுவரை மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்நாட்டில் 343 குழந்தைகள் உட்பட 937 பேர் உயிரிழந்துள்ளனர். சிந்து மாகாணத்தில் அதிகபட்சமாக 306 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 30 மில்லியன் பேர் தங்குமிடங்களை இழந்து தவித்துவருகின்றனர். இதனால், பாகிஸ்தான் அரசு தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது. பலுசிஸ்தானில் 234 இறப்புகளும், கைபர் பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் முறையே 185 மற்றும் 165 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 37 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 166.8 மிமீ மழை பெய்துள்ளது. இது முந்தைய ஆண்டுகளைவிட 241% அதிகமாகும். இந்த அதிகரிப்பு பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் திடீர் வெள்ளத்தை உருவாக்கியது. சிந்துவின் 23 மாவட்டங்கள் “பேரழிவு பாதித்தவை” என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசு மீட்பு நடவடிக்கைளை துரிதப்படுத்தினாலும், இடைவிடாத மழைப்பொழிவு நிவாரண நடவடிக்கைகளை கடினமாக்கியுள்ளது. ஹெலிகாப்டர் செல்ல முடியாத அளவுக்கு காலநிலை நிலவுகின்றன.