வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
இன்றுதான் முதல் முதலாக ஒரு குழந்தையைக் கையில் ஏந்துகிறான் சிம்மன். அவனிடம் எந்தக் குழந்தையும் நெருங்கி பழகியதில்லை. சிறு பிள்ளையாக இருந்த போதிலிருந்து அவனோட விளையாட எந்தச் சக பிள்ளைகளும் ஆசைப் பட்டதில்லை. அதனால்தானோ என்னவோ அவனுக்குத் தனிமை ஒரு சிறையாகவே இருந்தது. அவனால் எப்போதுமே தனிமையைப் பிரிந்திருக்கவே முடியவில்லை. எங்கேயாவது காணாமல் போய்விடலாம் என்று கூடச் சில நேரம் தோன்றும்.
அதற்குக் காரணம், அவனுக்கு நான்கு வயதிருக்கும் போது, ஒரு நாள் அம்மா அவனை இடுப்பில் வைத்துக் கொண்டே பூரி சுட்டுக் கொண்டிருந்த நேரம் உப்பும் பூரியைப் பிடிப்பதாய் எண்ணி பூரிக் கரண்டியைத் தட்டி விட, கொப்பளிக்கும் எண்ணெய் அவன் முகத்தில் அடித்ததோடல்லாமல், அவன் அம்மாவின் காலில் கொட்டி அம்மாவின் இடது கால் தோலும் எரிந்து போனது.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு போன போதும், முகத்தில் ஊற்றிய சுடு எண்ணெய் அவன் பாதி முகத்தைத் தின்று விட்டிருந்தது. இதையெல்லாம் விதி என்று யாரும் நினைத்தொதுங்கி விட முடியாது. அகோரமான முகம் அவனுக்குப் புதிதாயிருந்தது.
அந்த வயதில் அவன் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. அம்மாதான் எப்போதும், ” பிள்ளையை இப்படி ஆக்கிட்டேனே!! அவனை இடுப்புல வச்சிட்டு அந்த வேலையைச் செய்யாம இருந்திருக்கலாம்!! குழந்தையோட அழகான முகமே போச்சே!!” என்று எப்போதும் வருந்தி கொண்டேயிருந்தாள்.
சிம்மனின் அப்பாவை அவன் நினைவுத் தெரிந்ததிலிருந்து பார்த்ததில்லை. அம்மாதான் அவனை வளர்த்தாள். ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் துணித் தைக்கும் வேலை செய்து பிழைப்பை ஓட்டினாள்.
சிம்மன் சுட்டி, அதே நேரம், நன்றாகப் படித்தும் வந்தான். ஆனால், அவனுக்கு வயதாக வயதாக, அவனின் முகம் ஒரு பெரிய பாரமானது. பள்ளியில் அவனுக்கு முன்னாலே சக மாணவர்கள் அவனைக் கேலி செய்யும் போது அவனுக்கு அழுகையாக வரும்.
அப்போது அவன் பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். அரசு பள்ளியில்தான், அன்று அவர்கள் பள்ளியில் ஆண்டு விழா தினம். இவனை எதிலும் யாரும் எப்போதும் சேர்த்து கொள்வதில்லை. கலைக்குத் திறமையைப் போலவே, அழகும் முக்கியம் அல்லவா? சிம்மனின் வயதையொத்த அனைவரும் மேடையேறிப் பாட்டும், ஆட்டமும், கொண்டாட்டமுமாகக் கொண்டாடி கொண்டிருந்தனர். ஆனால், சிம்மனை எதிலும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் அல்லவா, ஒரு நிகழ்ச்சிக்கும் இன்னொரு நிகழ்ச்சிக்கும் நடுவில் கிடைத்தவொரு இடைவேளையில், பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தவன், தன் கையில் மறைத்து வைத்திருந்த காகிதத்தை எடுத்துக் கொண்டு வேகமாக மேடையேறி மைக்கை இறுகப் பிடித்துக் கொண்டு அவன் எழுதிய அழகான நெடுங்கவிதையைப் படிக்கத் துவங்கினான்! அவனைத் தடுக்க வந்தவர்கள் எல்லோரும் தடுமாறிப் போனார்கள்! முன்னே அமர்ந்திருந்த சிறப்பு விருந்தினர்களின் முன்னால் அவனை இழுத்து மேடையை விட்டு வெளியேற்றுவது பள்ளிக்கு அவமானத்தைப் பெற்று தருமென்று, கீழே அமர்ந்திருந்த தலைமை ஆசிரியரும் அவனைத் தடுக்க வந்தவர்களை நிற்பாட்டினார்.
“மேகம் மறைத்த வானின்
பின்னிருந்து எப்படியோ வழிகின்ற மழைக்காகக் காத்துக் கிடந்ததொரு புல்லின் விதை!
விதைக்குள்ளிருந்து துள்ளி குதித்து வந்த முளைப்புக்குத் தன்னை விரித்துத் திறந்து கொண்டதிந்த பூமி!!
அந்தோவொரு மான் அந்தப் புல் குஞ்சை மேய்ந்தது!!
மேய்ந்த அடுத்தக் கணம்
மானையொரு புலித் தின்றது!!
மானை விழுங்கிய புலியின் வயிற்றைக் கொம்பு கிழித்து
புலி மாண்டது!!
மண்ணோடு மங்கிப் போன புலியும் மாறும் புல்லும்
மீண்டுமொரு மழை வேண்டி காத்திருந்தன…
மழையோடு மண்ணோடு கரைந்து சென்று வனமெங்கும்
ஓடித் திரிந்தன!!”
என்று அவன் படித்து முடித்ததும், அனைவரும் எழுந்து நின்று கைத் தட்டி ஆரவாரம் செய்த போதுதான் அவன் சொற்களின் வீரியத்தை முதல் முதலில் அனுபவித்தான். சொற்கள் அவனை அரவணைத்து ஆத்மார்த்தமாய்த் தழுவி ஆசுவாசப்படுத்தியதாக உணர்ந்தான்.
அன்று, அங்கே வந்திருந்தவர்களின் கைத் தட்டலின் சத்தம், அவனை அழச் செய்தது. அதே நேரம், அவன் படித்து முடித்துவிட்டு மேடையை விட்டு இறங்கிய போது அவனை யாருமே திட்டவில்லை. அவனின் முதுகில் தட்டி கொடுத்தார்கள். அவனுக்கு அது மிகவும் புதிய அனுபவமாக இருந்தது.
அவன் அம்மாவிடம் சென்று அன்று நிகழ்ந்ததைப் பற்றிக் கூறிய போது, அவளுக்குப் பெருமை பொத்துக் கொண்டு கண்ணீராய் வந்தது. பிள்ளைக்கொரு முத்தமிட்டு, “உனக்குன்னு ஒரு வழித் தேடிக்கத் தங்கம். இது தொடக்கம்தான், இன்னும் இதையெல்லாம் தாண்டி நீ நிறையச் சாதிக்கனும்!” னு சொன்னதும்,
அப்போதிலிருந்து அவன் எப்படி இன்னும் நன்றாக எழுதுவதென்று தேடத் துவங்கினான். அவன் கண் முன் எவ்வழியும் தெரியவில்லை அவனுக்கு உதவ யாருமில்லை.
தோன்றியதையெல்லாம் பேப்பரில் எழுதத் துவங்கினான். கவிதையா கதையா என்று தெரியாமல் அவன் பள்ளி நோட்டுகளிலும் எழுதி கொண்டே இருந்தான். எழுத்து அவனுக்கு விடுதலைத் தந்தது, பாரங்களையெல்லாம் காகிதங்கள் விழுங்கி கொண்டன. அவமானங்களையெல்லாம் சொற்களால் அழகுபடுத்தத் துவங்கினான். எப்போதும், வெட்கப் பட்டுக் கொண்டு போட்டிகளில் பங்கேற்காமலிருந்தவன், எழுத்துப் போட்டிகளில் பங்கேற்கத் துவங்கினான். அவனைச் சுற்றிலும் நிகழும் அனைத்தையும் கவனித்து, அதிலிருந்து அவன் கற்று கொண்டவற்றையும் புரிந்து கொண்டவற்றையும் எழுதியபடியிருந்தான். போட்டிகளில் வென்றாலும் தோற்றாலும் அவனுக்கு மேடையேறுவதே மகிழ்ச்சியாக மாறியது.
மேடைகளுக்காக ஏங்கியவன், ஒரு பக்கம் நன்றாகப் படித்து அவனின் அம்மாவின் ஆசைப்படி ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்கத் துவங்கினான். அங்கேயும் அவனுக்கு அதே பிரச்சனை இருந்தாலும், இப்போது அவனுக்கு வேறொரு பிரச்சனையும் துவங்கியது. வயது அவனைப் பெண்களை நோக்கி இழுத்து சென்றாலும், அவனின் எரிந்த முகத்தைப் பார்த்து எந்தப் பெண்ணும் அவனிடம் பேசவே முன் வரவில்லை.
அவனுக்குப் பல நேரம் அழுகை வரும். அப்போதெல்லாம் ஒரு நோட்டுப் புத்தகத்தை வாங்கிப் பைத்தியக்காரனைப் போல் எழுதுவான். அவன் எழுதி எழுதி சேகரித்து வைத்தவொரு டிரங்கு பெட்டி முழுதும் நிரம்பி வழிந்தது.
அத்தகைய நேரத்தில்தான், அவன் கல்லூரி முதலாமாண்டு “கல்லூரி தின” விழா போட்டிகளுக்குப் பெயர் கேட்டு நோட்டீஸ் வந்தது.
அவனோடு நண்பர்கள் யாருமில்லை. இருந்தாலும் அவன் விலகியே இருப்பான். ஒரு காரணம்தான், சில நேரம் நண்பர்கள் என்ற போர்வையில் அவனை அழைத்துச் சென்று, முழுப் போதையில் இவனை ஊறுகாய் போலக் கிண்டல் செய்யப் பயன்படுத்திக் கொண்டனர். அதனால், இம்முறை தானே எழுதி, “மோனோ ஆக்ட்” செய்வதென்று முடிவெடுத்தான்.
இரவு பகல் பாராது உழைத்தவன், வசனங்களை மெருகேற்றி மெருகேற்றி, நடித்துப் பழகினான். அவனுக்குள், “இதைத் தாண்டியவொரு நிகழ்ச்சி அன்றைய நிகழ்வில் இருக்கவே கூடாது” என்ற வெறி தீயாய் எரிந்தது.
“கல்லூரி தின” விழாவும் வந்தது. தயாராய் மேடையில் ஏறியவன் வெறிப் பிடித்த நடிப்பையும் வசனங்களையும் கேட்டு அரங்கமே கலங்கித்தான் போனது. நிகழ்வின் முடிவில், அங்கே சிறப்பு விருந்தினராக வந்திருந்த சினிமா இயக்குநர், “தம்பி!! என்ன நீ கலங்கடிச்சிட்ட டா!! பேய் மாதிரி நடிப்பு!! அவ்வளவு அழகான வசனங்கள். ஒரே ஆளால, அவ்வளவு பிரமாதமாக இத்தனை முகப் பாவணைகளுடன் நடிக்க முடியுமா வியந்து போய்ப் பார்த்துக்கிட்டிருந்தேன்? எங்கேப்பா பயிற்சி எடுத்துக்கிட்ட?” என்று கேட்டுவிட்டார்.
“சார்!! எனக்குன்னு எங்கம்மா மட்டும்தான். பயிற்சிக்கு கொடுக்குமளவுக்கு என்னிடம் காசு இல்லை. அதனால், நான் எழுதிய கதையில் உள்ள கதாபாத்திரங்களுக்குத் தேவையான முகப் பாவங்கள் இதற்கு முன்னரே திரைப்படங்களில் வந்திருந்தன. அவற்றை யூடியூப்பில் பார்த்து அதைப் போல் கண்ணாடியில் நடித்துப் பார்த்துப் பயிற்சி செய்தேன் சார்” என்றான்.
அவனின் அத்தகைய விடாமுயற்சியைப் பற்றியறிந்ததும் அந்த இயக்குனர் சிம்மனை ஆரத்தழுவி கொண்டு, “தம்பி!! நீ படி. படிக்கும் நேரம் போக மீதி நேரம் என்னோட வந்து சினிமா கத்துக்கோ. என்னால் முடிந்த சம்பளம் வாங்கித் தரேன். ஆனா, நீ கத்துக்கிட்டு இன்னும் நிறையச் சாதிக்க வேண்டியவன் பா” என்று சொல்லி அவரின் ஃபோன் நம்பரும் விலாசமும் தந்து சென்றார்.
அவனுக்குள்ளிருந்து ஒரு அழகான முகம் முளைத்து அரங்கெங்கும் ஓடியது. மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று புரியாததால் எல்லோரும் அரங்கத்தை விட்டு வெளியேறியதை ஊர்ஜிதப்படுத்தியபின் அரங்கத்தின் மேடை மீதேறி, இயன்ற வரையில் சத்தமிட்டு மிகுதியான மகிழ்ச்சியின் ஓலத்தில் தன்னைத் தானே மூழ்கடித்துக் கொண்டான். அவன் தாய் மடியைப் போல் இதமாயிருந்த அந்த மேடையிலேயே படுத்துறங்கி போனான்.
கல்லூரி நேரம் போக மீதி நேரம் இயக்குனரோடுத் திரியத் துவங்கினான். இயக்குனரின் திரைப்படங்களின் கலந்துரையாடல்களில் பங்கேற்றான். மீதி இணை இயக்குனர்களுக்கு அவனின் அருவருப்பான முகத்தைக் கண்டு ஒவ்வாமை இருந்ததைப் போலவே, அவன் மீது மிகுந்த பொறாமையும் கொள்ளத் துவங்கினார்கள். ஏனென்றால், எல்லாக் கலந்துரையாடல்களிலும், சிம்மனின் பார்வையும் ஒரு காட்சியை அணுகும் கோணங்களும் அதி அற்புதமாகவும் அதே நேரம் புதுமையாகவும் இருந்தது. இயக்குனரே சில நேரம், “டேய் சிம்மா!! எப்படிடா இப்படிலாம் யோசிக்குற? நிறையப் புத்தகம் படிப்பியா?” என்று ஒரு முறை கேட்ட போது. ” இல்லை சார்!! புத்தகம் வாங்கும் காசுக்கு எங்கள் வீட்டில் ஒரு வேளை சோறு சாப்பிடலாம். அம்மாவின் சம்பாத்தியத்தில் இப்போது வரை கல்லூரி ஃபீஸும் மூன்று வேளை உணவும் உடுத்த உடையுமே பெரிய அதிசயம். எங்கேயிருந்து புத்தகங்களைப் படிப்பது!” என்றான். இதைக் கேட்ட இயக்குநர், ” அடப் பைத்தியம். சரி உங்கிட்ட ஸ்மார்ட் ஃபோன் தான் இருக்கு?” “இருக்கு சார்! அம்மா நான் கல்லூரி போறேன்னு அங்கேயிருந்து என்னோட தொடர்புல இருக்குறதுக்காக ஒரு செகண்ட் ஹேண்ட் ஃபோன் வாங்கிக் கொடுத்தாங்க. அதுல கொஞ்சம் யூடியூப் மட்டும் பயன்படுத்துவேன் சார்.” என்றான்.
“சரி!! அதுல கிண்டில் இன்ஸ்டால் பண்ணிக்கோ நான் உனக்கு ஒரு வருட சந்தாவை என்னோட அன்பளிப்பாகத் தரேன். அதுல நிறையப் புத்தகங்களிருக்கும் படி. அவை உன்னை இன்னும் பட்டைத் தீட்டும்!” என்று கூறி சந்தாவையும் கட்டினார்.
வைரம் அப்படித் தன் சொற்களைப் பிறர் சொற்களால் மேலும் பட்டைத் தீட்டிக் கொள்ளத் துவங்கியது. இலவசமாய்க் கிண்டிலில் கிடைத்த புத்தகங்கள் அனைத்தையும் நேரங்காலமின்றி வாசித்தான். வாசிப்பு எவனுக்கும் ஏற்கனவே கரைபுரண்டோடிய கற்பனையை இன்னும் நெறிபடுத்தி அழகாக்கியது. எது தேவை? எது தேவையில்லை? என்று எல்லாவித புரிதலும் பெற்றான்.
கல்லூரிக்கு செல்வது குறைந்து போனது. இயக்குநரிடம் முழு நேர உதவி இயக்குநராகச் சேர்ந்தான். வாழ்க்கை கல்லூரியில் மட்டுமில்லை, தனக்கான வழிகாட்டியாக இயக்குநர் சார் இருப்பதாகவும், அவர் மட்டுமே தன்னல சக மனிதனாக மதித்து நடத்தி ஒரு பாதையில் தன்னை அழகாய் அழைத்துச் செல்வதாகவும். இனி இந்தப் பாதைதான் என் வாழ்வென்றும் தன் தாயிடம் கூறி புரிய வைத்தான். அம்மாவும், தன் பிள்ளை இவ்வளவு நம்பிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் பேசுவதைக் கேட்டதும்-அவன் ஒளியை நோக்கி செல்வதைப் புரிந்து கொண்டு “சரி” என்றாள். இதுதானே அவனின் வாழ்க்கையின் வரம்?
பிறகு அவன் திரும்பி பார்க்கவே இல்லை. அவனின் நேரமெல்லாம் சினிமா சூட்டிங்கிலும், தொடர்ந்து இயக்குநரின் திரைப்படங்களில் வேலை செய்வதுமாகவே போனது. நேரம் கிடைத்த போதெல்லாம் எழுதினான். சிம்மனுக்கான மதிப்புக் கொஞ்சம் கொஞ்சமாக உச்சத்தை எட்டியது. அவன் எதிர்பாராத தருணத்திலொரு நாள், இயக்குநர் அவனை அழைத்தார்… அவரைச் சந்திக்கச் சென்றவனிடம் இயக்குநர் இப்படிக் கூறினார், “டேய் தம்பி சிம்மா!! உன்னை இப்போதுதான் சந்தித்த மாதிரி இருக்குடா. எனக்காக நீ நிறைய உழைச்சிருக்க. என்னோட நிறையப் படங்கள் நல்லா இருக்குன்னு மக்கள் நினைக்கிறாங்கன்னா அதுக்கு நீ என்னோட இருக்குறதும் ஒரு முக்கியமான காரணம். அப்படி இருக்கும் போது, நான் உன்னை ஏனோ மிஸ்யூஸ் பண்ணுவதைப் போல் உணர்கிறேன்” என்றார்.
“சார்! எனக்குக் கூடப் பிறந்தவங்க இல்லை. என் முகத்துல எண்ணெய் ஊத்துனப்போல இருந்து நான் உங்களைச் சந்திக்கும் வரை, எனக்குன்னு ஒன்னுமே இல்ல. என் மேல் முதல் முதல்ல நம்பிக்கை வைத்து, என்னை ஒரு சக மனுசனா மதித்து உங்களோடவே இன்றைக்கு வரை வைத்துக் கொண்டு தொழிலும் கத்து கொடுத்து சம்பளமும் கொடுத்துட்டுருக்கீங்க. காலம் பூராவும் உங்ககிட்டேய சம்பளமே இல்லாம வேலை செஞ்சா தான் அந்த நன்றி கடனே தீரும்” என்றான்.
அவன் பேசி முடித்த போது இயக்குநர் கண்களிலிருந்து உருண்ட கண்ணீர் துளிகளைத் துடைத்துக் கொண்டார். “தம்பி!! நீ தனியா படம் பண்ணி பெரிய இயக்குநராக வரதைப் பார்க்கணும்னு ஆசையா இருக்குடா? நீ சாதாரணமானவன் இல்லை. உன்னால் அசாதாரணமான படைப்புகளை ரொம்பச் சாதாரணமாகக் கொடுக்க முடியும். இதுக்கும் மேல் உன்னை என்னோட நிழல்லேயே நிற்க வைத்து உன்னோட திறமைக்குக் கடிவாளம் போட்டு கட்டி வைக்குறதுல எனக்கு விருப்பமில்லை! நீ சரின்னு சொல்லு- என்னால் உன்னோட முதல் படத்தைப் புரொடியூஸ் பண்ண முடியும்.” என்றார்.
சிம்மனின் கண்களில் அச்சம் தொற்றிக் கொண்டதை இயக்குநர் கவனித்து விட்டார். “என்ன சிம்மா?” என்று மீண்டும் கேட்டார்.
“சார்!! உங்ககிட்ட நான் வரும் போது எனக்குப் பத்தொன்பது இருந்து வயசிருக்கும். இந்த முகத்தை வைத்துக் கொண்டு எங்கே போனாலும் என்னை விரட்டி கொண்டிருந்தார்கள். நானும் ஓடி கொண்டிருந்தேன்”… “டேய்! சிம்மா… சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிட்டிருக்காத. நீ எல்லாத்தையும் தாண்டி வந்துட்ட, இப்போ உனக்கான நேரம் வந்துருச்சு…”
“ஒரு நிமிசம் சார்!! என்னால் படமெடுக்க முடியும்னு நீங்களே சொன்ன பிறகு, அதைவிடச் சிறந்த நம்பிக்கை எனக்கு வேற வேண்டாம். ஆனா, இப்போ என் பிரச்சனையே வேற. நீங்க நம்புற மாதிரி இல்லாம, படத்துல நடிக்குறவங்க எல்லாரும் நினைக்கனும். இது வரைக்கும் அங்களோட அசிஸ்டென்டா இருக்க ஒரே காரணத்துனாலதான் நடிகர்கள் டெக்னீசியன்லாம் எங்கூட வேலை செய்யுறாங்க. நான் உங்களை விட்டு போயிட்டா அப்புறம் யாருமே எங்கிட்ட கூட வர மாட்டாங்க ” என்ற சிம்மனைப் பார்த்து இயக்குநர் சிரித்தார்.
“தம்பி சிம்மா!! நீ நினைக்குறது எல்லாமே தப்பு. ஆனா, நீ சொல்லுற நிலைமை உண்மையா இருந்தா, அது உன்னோட கிரியேட்டிவிட்டியையும் பாதிக்கும். நாம் ஒன்னு பண்ணுவோம், டெக்னிகல் டீம், நடிகர்கள் எல்லாருக்கும் ஆடிசன் வைத்து ஒரு புது டீமை ஃபார்ம் பண்ணுவோம். எங்கிட்ட பணமிருக்கு, உன்னால் கல்லைக் கூட நடிக்க வைக்க முடியும்னு எனக்குத் தெரியும். அதனால் வாய்ப்புக்காக ஏங்கி காத்திருக்கும் அத்தனை பேரையும் கூப்பிடுவோம், அவங்க எல்லாமே தெரிந்துதான் நம்மக்கிட்ட வருவாங்க. அப்போ உனக்கும் ஃபிரீடம் கிடைக்கும். என்ன சொல்லுற?” என்றார்.
சிம்மனுக்கு வேறென்ன வேண்டும். தன் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பவரின் பெயருக்கு கலங்கமின்றி ஒரு திரைப்படத்தை எடுக்கும் வேலைகளை அன்றிலிருந்து துவங்கினான். எழுத்துதான் அவன் விரல்களில் எப்போதும் ஊறிக் கொண்டேயிருக்குமே, அந்த வற்றாத ஊற்று இப்போது இருபது வருட அனுபவத்தோடு வேறல்லவா ஊறும்.
காற்று போல் நாட்கள் பறந்தது. அவனின் முதல் படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. இயக்குநர் அவன் பெற்ற வெற்றியைப் பெற்ற பிள்ளையின் வெற்றி போல் கொண்டாடினார். புது முகங்கள், புது அணியை வைத்து இதுவரை இந்திய சினிமாவே சந்தித்திராதவொரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றும் விட்டான்.
அவனின் வெற்றிகள் தொடர்ந்தபடியிருந்தன. அவனைத் தேடி நடிகர்களும் தயாரிப்பு நிறுவனங்களும் வந்தன. கால ஓட்டத்தில் அவனும் ஓடியபடியிருந்தான். பணம் கொட்டியது.
அவனின் நாற்பத்து நான்காவது வயதின் போதுதான் அவனின் அம்மா தவறி போனாள். அதிலிருந்து மீளும் வலுவை அவன் ஏற்கனவே பெற்றிருந்தான். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் படுக்கையில் கிடந்த அம்மா, இறுதியாக வாதையிலிருந்து விடுதலையானதாகவே அவன் நினைத்து ஆறுதல் கொண்டான். அவள் படுத்தப் படுக்கையிலிருந்த காலமெல்லாம் அவனிடம் கெஞ்சியது, “சிம்மா!! ஒரு துணைக்காவாச்சும் கல்யாணம் பண்ணிக்கோ டா?” என்பதுதான். ஆனால், அவன் அதில் ஈடுபாடு காட்டவே இல்லை.
அவனுக்கு அவன் முகத்தைச் சரி செய்து கொள்ளும் நோக்கமும் மறந்து போயிருந்தது. கல்லூரி காலங்களில் அவனோட பேசவே தயங்கிய பெண்களைப் பார்த்திருக்கிறான். இந்த முகம் அவனுக்குக் கொடுத்த பிரசவ வலியிலிருந்து தான் அவமானங்களிலிருந்துதான் அவனின் இந்த வாழ்வே பிறந்தது என்று அவன் உணர்ந்து பல வருடங்களாகியிருந்தன. அதனால் இந்த முகத்தைச் சீரமைக்க அவனுக்கே மனமேயில்லை. அதோடு, இத்தனை நாளாய் அவனருகில் கூட வராதவர்கள், அவனிடம் பணமிருப்பதால்தானே அருகே வருகிறார்கள்? அவன் திறமையைக் கூட யாரும் மதிக்கவில்லையே? அந்தப் போலி மனிதர்களை மகிழ்விக்கவா இந்த முகத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்குத் தோன்றியிருந்தது. அதனால்தான் அவன் கல்யாணத்தில் நாட்டம் கொள்ளவேயில்லை. ஆனால், அவனுக்குப் பல வருடங்களாகக் குழந்தைகளோடு விளையாட வேண்டும் என்ற ஆசையுண்டு. எப்போது எப்படி முயன்றாலும் குழந்தைகள் இவன் முகத்தைக் கண்டு அஞ்சியோடும். அதனால், அந்த வாய்ப்பு கிடைக்காமலேயே பழகி போனான். அம்மாவின் ஆசைக்கு இணங்கினாலும் கூட, அம்மாவுக்குப் பின் அவனுக்குத் துணையாக யாருமிருக்க மாட்டார்கள் என்ற அச்சம் அவனுக்கு இருந்தது. இயக்குநர் அவனுக்கு எவ்வளவோ செய்திருக்கிறார் ஆனால், அவர் இவனுக்கு ஆசானேயொழியத் துணையில்லையே?
அம்மாவிடம் சிரித்து மழுப்பிக் கொண்டேயிருந்தவன், அம்மாவின் இறப்புக்குப் பின் தோய்வடைந்தான். அவனுக்குள் தனிமைப் பேய் போல் புகுந்து கொண்டது. அம்மா இறந்து இரண்டு வருடங்களில் ஒரு திரைப்படம்தான் செய்ய முடிந்தது. அதுவும் முழு மனதாகச் செய்ய முடியாமல் படுதோல்வியாய் முடிந்த காரணத்தால், கற்பனைகள் வற்றிப் போய்விடுமோ என்றஞ்சியே எதுவும் எழுத முடியாமல் கிடந்தான். அப்போதுதான், அவன் யூடியுப் பில் அந்தக் குறும்படத்தைப் பார்த்தான். அவனுக்குள் ஒரு பேரானந்தம் சட்டென ஒளிர்ந்தது. பெருமகிழ்ச்சியுடன் கிளம்பி இயக்குநரைக் காண சென்றான்.
வழியில் இயக்குநருக்கு ஃபோன் செய்து வீட்டிலிருக்கிறாரா என்று ஊர்ஜிதம் செய்தபடியே காரை ஓட்டிக் கொண்டிருந்தான். கற்பனையில் அவனுக்குள் ஒரு பத்து வருடம் ஓடியே விட்டது. இயக்குநரின் வீடு வந்ததும், காரை நிறுத்திவிட்டு ஓட்டமும் நடையுமாக அவரின் வீட்டுக்குள் நுழைந்தான். சிரித்தமுகமாக இவ்வளவு சந்தோசமாக அவனைப் பார்த்த பல நாட்களானதால் இயக்குநர் ஆனந்தமாய் அவனிடம் “என்ன சிம்மா? ஆளே குதூகலமாக இருக்கியே ரொம்பச் சந்தோசம் டா உன்னை இப்படிப் பார்க்க” என்றார்.
பதிலுக்குச் சிம்மன்,”சார்!! ரொம்பத் துவண்டு தான் பேயிருந்தேன். இப்போ அரை மணி நேரம் முன்னாடி வரைக்கும், அம்மா இறந்ததலிருந்து தனிமையான ஃபீல் பண்ணிட்டிருந்தேன் சார். அம்மா என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி நிர்பந்தம் முந்திய போதெல்லாம், அதைப் பற்றி யோசிச்சாலே எனக்கு ஒவ்வாமையா இருந்தது. ஆனாலும், எனக்குன்னு நான் விளையாட என்னோட இருக்குன்னு ஒரு குழந்தை வேணுமுன்னும் தோன்றும். அரை மணி நேரத்துக்கு முன்னாடி, ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ னு ஒரு குறும்படம் யூடியூப்ல பார்த்தேன். பார்த்ததும்தான், ஏன் நாம் இதைப் பற்றி யோசிக்கக் கூடாதுன்னு தோனுச்சு?”
ஆர்வமாய்க் கேட்டுக் கொண்டிருந்த இயக்குநர், ‘இவ்வளவு மகிழ்வாக இவன் பேசுமளவு என்ன நடந்திருக்கும்’ என்றெண்ணியபடியே சற்று தன் சோஃபாவிலிருந்து முன் வந்து “என்னடா தோனுச்சு?” சீக்கிரம் சொல்லு என்றார்.
“இருங்க சார்!! அந்தப் படத்துல ஒரு வயசான அம்மா வாடகைத் தாயா நடிச்சிருந்தாங்க. எனக்கு அதைப் பார்த்ததும், ‘ஏன் நாம் இதை முயற்சிக்கக் கூடாது? கல்யாணம் பண்ணிதான் பிள்ளைப் பெத்துக்கனுமா என்ன? நம்மக்கிட்டதான் பணமிருக்கு-சொத்துக்கு வாரிசும் வேணும் என்னோட அன்பைப் பொழிய எனக்கொரு குழந்தையும் வேணும். அப்போ ஏன் நாம் ஒரு வாடகைத்தாயை லீகலா ஏற்பாடு செய்து என் முலமாகவே செயற்கையாகக் கருத்தரிக்க வைத்து என் குழந்தையைப் பெற கூடாது’ன்னு தோணுச்சு சார்! அதான் உடனே உங்களைப் பார்க்க வந்தேன்!” என்று மகிழ்ச்சிப் பொங்க பகிர்ந்தான்.
இதைக் கேட்டதுமே சற்று குழம்பிய இயக்குநர், “ஏன்பா!! நீ அதுக்குப் பதிலா அப்பா அம்மா இல்லாத எத்தனையோ குழந்தைங்க ஆசிரமத்துல வளருறாங்க அவங்களைத் தத்தெடுக்கலாமே?” என்று கேட்டதற்கு
“நானும் அதை யோசிச்சிருக்கேன் சார்!! ஆனா, எந்தக் குழந்தையுமே அருகில் வராத அளவுக்கான என் முகத்தின் அகோரத்த பற்றி யோசித்ததும் அந்த எண்ணமே இல்லாமல் போய்விட்டது. பிறந்ததிலிருந்து என்னுடனே வளரும் குழந்தை என்னை என் தாய் போல் பாவித்து ஏற்றுக் கொள்வான்/ள். அதனால்தான் இந்த முடிவை எடுத்தேன்” என்றான்.
“சரியான முடிவுதான் சிம்மன்!!! உன்னைப் போல் என்னால் யோசிக்க முடியாதுப்பா. என் கூட வா இதுல லீகல் பிரச்சனை எதாவது இருக்கா, வேற என்னலாம் மெடிக்கலா பாசிபிள்னு போய் என்னோட ஃபேமிலி டாக்டர்கிட்ட விசாரிப்போம்” என்றார்.
சிம்மன் தன் மனம் துள்ளத்துள்ள மகிழ்ச்சித் ததும்ப அவரோடு கிளம்பினான்.
***முற்றும்***
-குமரகுரு
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.