விமான நிலையம் கட்டுவதா வளர்ச்சி?… சீமான் கேள்வி

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்திவருகின்றன்பர். இந்தப் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது, “கிட்டத்தட்ட 5 ஆயிரம் ஏக்கர் பல கிராமங்கள், பல்லாயிரக்கணக்கான விளை நிலங்களை காலி செய்துவிட்டனர். இதில் 40க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், குட்டைகள். அதாவது 2605 சதுப்பு நிலப்பகுதி நீர்பிடிப்புப் பகுதிகள். அதுபோக 985 நீர்நிலைகள், இவையெல்லாம் காலி செய்துவிட்டு ஒரு விமான நிலையம் கட்டுவதை வளர்ச்சி என்று கூறுகின்றனர்.

இதில் அமைச்சர், 2030-35ஆம் ஆண்டில் 10 கோடி மக்கள் பயணிக்கிற அளவுக்கு வசதிகள் வந்துவிடும் என்று சொல்கிறார். 2022ஆம் ஆண்டில் தொடங்கி 2028ஆம் ஆண்டுக்குள் இதை முடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், 2030-35 வாழுகின்ற மக்களின் பயணத் தேவையை நிறைவு செய்ய முடியாது என்று கூறுகிறார்.

இவ்வளவு தொலைநோக்காக சிந்திக்கின்ற உங்களிடம், அப்போது வாழுகின்ற மக்களின் குடிநீர் தேவை, உணவுத் தேவையை நிறைவேற்ற ஏதாவது தொலைநோக்கான திட்டங்கள் இருக்கிறதா? ஒவ்வொரு முறையும் சென்னை வெள்ளச் சேதத்தை எதிர்கொள்கிறது. கழிவுநீர், மழைநீர் தேக்கமின்றி வழிந்தோட ஏதாவது திட்டம் உள்ளதா? தலைநகரிலேயே இன்னும் பாதை சரியாக போடவில்லை.

 

இப்போது இருக்கின்ற விமான நிலையத்திலேயே நூறு முறைக்கும் மேலாக கண்ணாடி இடிந்து விழுந்துள்ளது. அதை சரி செய்யாமல், புதிதாக விமான நிலையம் கட்டுகிறீர்கள். இதற்கு பெங்களூர, ஹைதராபாத்தை உதாரணமாக கூறுகிறீர்கள். புதிய விமான நிலையத்தால், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள அடித்தட்டு மக்கள் வளர்ச்சியைடந்துள்ளனர் என்று சொல்ல முடியுமா?

விளைநிலங்களின் வளங்களே இந்த நாட்டில் மிக குறைவாக இருக்கின்றபோது சாலை அமைப்பது, இதுபோல விமான நிலையம் கட்டுவது, இதற்காக பல்லாயிரக்கணக்கான விளை நிலங்களை பறிக்கிறீர்கள்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.