காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல்காந்தியின் இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை குறித்து தென் மண்டல கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்தியாவை ஒற்றுமைப்படுத்த மக்களை நேசிக்க, எதன் பெயராலும் மக்களை பிரிக்காத வகையில், இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
தற்போது நாட்டில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., கலாசாரம், மக்களைப் பிரிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. நாட்டில் வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்ந்து இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை விண்ணை தொட்ட நிலையில் உள்ளது. இதற்கு மத்தியில் ஆளும் பா.ஜ.கவின் தவறான பொருளாதார கொள்கைதான் கராணம்.
விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு வருமானம் பெருகும் என, பிரதமர் மோடி சொன்னார். அதுவும் நடக்கவில்லை, பா.ஜ.க அரசின் இந்த வீழ்ச்சி குறித்து மக்களிடம் எடுத்துக் கொண்டு செல்ல இந்த பயணம் மேற்கொள்ளப்படும். பா.ஜ.கவுக்கும் சுதந்திரதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸ் அல்லாத பல கட்சிகள் பங்கெடுத்து இருக்கிறார்கள். பா.ஜ.க இப்போதாவது சுதந்திரத்தை கொண்டாடுவது மகிழ்ச்சி, இவ்வளவு காலம் ஏன் பா.ஜ.க பங்கெடுக்கவில்லை.
சுதந்திர தினநாள் அன்று ஏன் கொடி ஏற்றவில்லை. ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் இதுவரை 2 தடவை மட்டுமே சுதந்திர கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது. நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த போதும், மறைந்த வாஜ்பாய் பிரதமராகச் சென்ற போது என இரண்டு முறை மட்டுமே கொடி ஏற்றப்பட்டுள்ளது. இப்போது கொண்டாடக் கூடிய காரணம் என்ன?” என்றார்.