பனாஜி: ஹரியானா பாஜக பிரமுகர் சோனாலி போகத் கொலை தொடர்பாக அவரது உதவியாளர்கள் 2 பேரை கோவா போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகை சோனாலி போகத் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர். பின்னர் நடிகையானார். 2020-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சோனாலி போகத் கலந்து கொண்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் இணைந்த சோனாலி, 2019-ல் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். ஹரியானாவின் ஆதம்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் மீண்டும் பாஜக வேட்பாளராக சோனாலி களமிறங்குவார் என கூறப்பட்டது.
இந்த நிலையில் சோனாலி போகத் தமது நண்பர்களுடன் கோவா மாநிலம் சென்றார். கடந்த திங்கள்கிழமையன்று கோவாவில் பார்ட்டி ஒன்றில் பங்கேற்றார். பின்னர் திடீரென சோனாலி உயிரிழந்தார். முதலில் மாரடைப்பால் சோனாலி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் சோனாலியின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனைத் தொடந்து சோனாலியின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை கோவாவிலேயே நடந்தது. அப்போது சோனாலியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் சோனாலி கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுத்தது.
இதனைத் தொடர்ந்து சோனாலியின் உதவியாளர்கள் சுதிர், சுக்விந்தர் ஆகியோரை போலீசார் வளைத்துப் பிடித்து விசாரித்தனர். இருவரும் இணைந்தே சோனாலியை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்து மிரட்டி உள்ளனர். பின்னர் சோனாலியை இருவரும் கொலை செய்தனர் என்கிறது போலீஸ்.
இந்நிலையில்தான் சுதிர், சுக்விந்தர் இருவரையும் கோவா போலீசார் கைது செய்துள்ளனர். இருவரிடம் தொடர்ந்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.