ஹைதராபாத்: ஹைதராபாத் கோஷாமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா சிங். மதக்கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விமர்சித்ததாக இவர் மீது புகார்கள் கூறப்பட்டன. அதன் அடிப்படையில் ராஜாசிங்கை ஹைதராபாத் போலீஸார் கைது செய்து நாம்பல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றமும் 15 நாட்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. ஆனால், எம்எல்ஏவை கைது செய்ய சிறப்பு அனுமதி பெற வேண்டுமெனவும் கூறி ராஜாசிங் ஜாமீன் பெற்றார். இந்நிலையில், மத கலவரத்தை தூண்டும் வகையில் மீண்டும் சமூக ஊடகங்களில் பேசப்போவதாக அறிவித்ததாக ஹைதராபாத் போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் நேற்று மாலை அவரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜாசிங்கை விடுவிக்க கோரி பல்வேறு இடங்களில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.