புதுடெல்லி: நாடு முழுவதிலும் 21 போலி பல்கலைக் கழகங்கள் செயல்படுவதாக பல்கலை மானிய குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பல்கலை மானிய குழு (யுஜிசி) செயலர் ரஜனீஷ் ஜெயின் கூறியதாவது:
நாட்டில் யுஜிசி சட்டப்படி அங்கீகாரம் பெறாத 21 போலி பல்கலைக் கழங்கள் செயல்பட்டு வருகின்றன. அவைகளுக்கு பட்டம் அல்லது சான்றிதழ் வழங்கும் தகுதியில்லை. புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது.
இவற்றில் டெல்லியில் 8, உபியில் 7 போலி பல்கலை.கள் உள்ளன. புதுச்சேரியில் ஸ்ரீபோதி அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன், கேரளாவில் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக் கழகம், கர்நாடகாவில் படகன்வி சர்க்கார் உலக திறந்தநிலை பல்கலைக்கழக கல்வி சங்கம், ஆந்திராவில் கிறிஸ்து புதிய ஏற்பாடு நிகர்நிலை பல்கலைக் கழகம் ஆகியவையும் போலி பட்டியலில் உள்ளன.