விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தில்லை நடராஜனை இழிவாக பேசிய யூ-டியூபர் மைனர் விஜயனை போலீஸ் கைது செய்யவில்லை. கனல் கண்ணனை மட்டும் ஏன் கைது செய்கிறார்கள். இது காவல்துறையா? அல்லது முதல்வர் ஸ்டாலினின் ஏவல் துறையா?.
இந்த ஆட்சியில், காவல்துறை அரசாங்கத்திற்கு எடுப்படியாக உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கூட திருமஞ்சனத்திற்கு தண்ணீர் எடுக்கும் கிணற்றை உண்டியலாக மாற்றி அராஜகம் செய்துள்ளனர். இந்த ஆட்சியை பொறுத்தவரை அறநிலைத்துறை ஒரு இடத்தில் நுழைந்தால் அது ஆமை புகுந்த வீடுதான். கோயிலில் இப்போது உள்ள நிலையை மாற்றுவதற்கு எங்களுக்கு 10 நிமிடம் ஆகாது. ஆனால் அது எங்களின் வழி அல்ல. இந்து மதத்தை அழிக்கிற துறையாக, கொள்ளையடிக்கின்ற இடமாக தீயசக்திகளின் கும்பலாக அறநிலையத்துறை செயல்படுகிறது.
பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்த, நான் ஏன் கருத்து சொல்ல வேண்டும், சேலம் எட்டு வழிச் சாலைக்கு அனுமதிக்கக் கூடாது என எழுத்துப்பூர்வமாக தெரிவித்த ஸ்டாலின் இப்பொழுது அதற்கு அனுமதி அளிக்கிறார். அப்படியிருக்கையில் இதற்கென்ன பதில் சொல்ல. இந்த கேள்விக்கான பதிலை அவர்களிடமே விட்டுவிடுவோம். தமிழகத்திற்கு அறிவார்ந்த தேசப்பக்தியுடைய ஆளுநர் கிடைத்துள்ளார். இது உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
தொடர்ந்து, ராணுவ வீரர் இறப்பு குறித்து தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாக பரவும் ஒரு ஆடியோ குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு, டென்ஷனான ஹெச்.ராஜா, “சரவணன் மிமிக்கிரி செய்து அந்த ஆடியோவை வெளியிட்டார் என நேற்றே அதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில் இன்று இந்தக்கேள்வியை எதற்காக என்னிடம் கேட்க வேண்டும். தி.மு.க.வில் புதிதாக சேர்ந்த நபர் இப்படியொரு காரியம் செய்திருக்கிறாரே என ஸ்டானிடனிடம் இந்த கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும்?” என கடுகடுத்தார்.