“அன்று மட்டும் இப்படி நடந்திருந்தால் காங்கிரஸுக்கு இந்த நிலைமை வந்திருக்காது”-மணீஷ் திவாரி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து கபில் சிபல், குலாம் நபி ஆசாத் என அடுத்தடுத்து முக்கிய தலைவர்கள் விலகி வரும்நிலையில், அக்கட்சிக்குள்ளேயும், வெளியேயும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான மணீஷ் திவாரி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இந்த விவகாரத்தை காங்கிரஸ் தலைமை தீவிர விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜி23 தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு, 2 ஆண்டுகளுக்கு முன்பே கடிதம் எழுதி இருந்ததாக தெரிவித்துள்ளார். அந்த கடிதத்திற்குப் பிறகு நடைபெற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது என மணீஷ் திவாரி சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்தியாவும் காங்கிரஸ் கட்சியும் ஒரே சிந்தனையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டும் வெவ்வேறு சிந்தனைகளை கொண்டதாக மாறிவிட்டது எனவும், கடந்த 1885-ம் ஆண்டுக்குப் பிறகு இருந்த காங்கிரஸ் கட்சிக்கும், இந்தியாவுக்கும் இடையேயான பிணைப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது; அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு இப்போதைக்கு சுய பரிசோதனையை தேவை எனவும், 2020 டிசம்பர் 20-ம் தேதி சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அனைவருடைய ஒருமித்த கருத்தும் நிறைவேற்றப்பட்டிருந்தால் காங்கிரஸ் கட்சி இத்தகைய சூழலுக்கு வந்திருக்காது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
image
மேலும், குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் தலைமையை விமர்சித்தது தொடர்பாக இப்போதைக்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனக் கூறிய மணீஷ் திவாரி, எங்களுக்கு யாருடைய சான்றிதழும் தேவையில்லை எனவும், காங்கிரஸ் கட்சிக்காக 42 வருடங்கள் உழைத்து உள்ளோம் என தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சி தங்களை குத்தகைக்கு எடுத்து வைக்கவில்லை எனவும், தாங்கள் கட்சியின் உறுப்பினர்கள் எனக் கூறியுள்ள மணீஷ் திவாரி எங்களை வெளியேற்ற முயற்சி செய்வது தங்களுக்கு தெரியும் எனவும் பதில் அளித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.