சென்னை: அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 187 நீர்நிலைகளை புனரமைக்க ரூ.113.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு புனரமைப்புக்கான அடல் இயக்கம் மற்றும் நகர்ப்புற மறுசீரமைப்பு 2.0 (அம்ருத் 2.0) திட்டத்தை செயல்படுத்த கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதன்படி இந்த திட்டம் 2025 – 26 வரை செயல்படுத்தபடவுள்ளது.
இந்தத் திட்டத்தில் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குறைந்த செலவில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் சேவைகள் வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ரூ.2 லட்சத்து 77,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4,378 நகரங்களில் உள்ள வீடுகளுக்கு குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்க அம்ருத் 2.0-ல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 500 அம்ருத் நகரங்களில் வீடுகளில் 100 சதவீத கழிவு மேலாண்மையை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்ருத் 2.0 திட்டத்தில் 14 மாநிலங்களில் மொத்தம் 690 நீர்நிலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அசாம் மாநிலத்தில் 30, சத்தீஸ்கர் மாநிலத்தில் 60, டெல்லியில் 38, குஜராத்தில் 123, லாடாக்கில் 1, மத்தியப் பிரதேசத்தில் 89, மகாராஷ்டிராவில் 77, மணிப்பூரில் 17, ஒடிசாவில் 16, புதுச்சேரியில் 3, ராஜஸ்தானில் 23, சிக்கிமில் 1, தமிழ்நாட்டில் 187, மேற்கு வங்கத்தில் 23 நீர் நிலைகளை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 187 நீர் நிலைகளை புனரமைப்பு செய்ய ரூ.113.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.