சென்னை: ஆட்டோ கட்டணத்தை விரைவில் மாற்றியமைக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் உரிமைக் குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, போக்குவரத்துத் துறை ஆணையர் நிர்மல் ராஜ், போக்குவரத்து துறை கூடுதல் ஆணையர் மணக்குமார் ஆகியோரை உரிமைக் குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் சார்பாக பொதுச் செயலாளர் அ.ஜாஹிர் ஹுசைன் மற்றும் மண்டல செயலாளர் மு.மகேஷ் ஆகியோரும் ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளும் சந்தித்து பேசினர்.
அப்போது, ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைத்து விரைவில் அறிவிக்க வேண்டும், கேரள அரசைப் போல் தமிழக அரசும் வாடகை வாகன முன்பதிவு செயலியைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வரும் ரிப்ளக்டிவ் ஸ்டிக்கர் பிரச்சினை தொடர்பாகவும், போக்குவரத்துத் துறையில் நிலவக்கூடிய பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: விரைவில் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்படும். தமிழக அரசு சார்பாக முன்பதிவு செயலியை தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர் என்று அவர்கள் கூறினர்.