ஆந்திராவில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் இருந்து 28 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக எல்லை வழியாக போதை பொருட்கள் கடத்தலை தடுப்பதில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழக ஆந்திர எல்லையில் காவல் துறையினர் தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பேருந்துகளை சோதனை செய்து கடந்த 7 தினங்களில் மட்டும் சுமார் 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கும்மிடிப்பூண்டி காவல் துறையினர், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் ஆந்திராவின் காக்கிநாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த சர்க்கார் விரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, 3 மூட்டைகளில் பண்டல் பண்டல்களாக கஞ்சா இருந்ததை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். ஆனால், காவல் துறையினரை கண்டதும் கஞ்சா கடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா 28 கிலோ எனவும் கஞ்சா கடத்தியவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM