சென்னை: ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் தமிக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் அன்லைன் ரம்மியால் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து, அவர்களின் அறிக்கையும் பெறப்பட்டது. மேலும், கடந்த 7-ஆம் தேதி முதல் பொதுமக்கள், பெற்றோா், ஆசிரியா்கள், மாணவா்கள், இளைய தலைமுறையினா், உளவியலாளா்கள், சமூக ஆா்வலா்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டன. குறிப்பாக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அலுவலகத்திலோ அல்லது மின் அஞ்சல் முகவரியிலோ ஆகஸ்டு 12-ஆம் தேதிக்குள்ளாக கருத்துகளைத் தெரிவிக்கலாம் என தமிழக அரசு கூறியிருந்தது.
இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனையில் முதல்வரின் தனி செயலர் உதயச்சந்திரன், உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனயில் ஈடுபட்டு வருகின்றனர்.