திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும் என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
இதுகுறித்து திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியது:பெரியாரைப் பற்றி கட்டுரைப் போட்டி நடத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
தமிழைக் காட்டுமிராண்டி மொழிஎன்றும், சுதந்திரம் வேண்டாம் என்றும் சொன்னவர் பெரியார். அவரது வரலாற்றை பாடத்திட்டத்தில் கொண்டுவர சதி நடக்கிறது. இதைக் கண்டிக்கிறோம்.
தமிழகம் முழுவதும் 1.50 லட்சம்இடங்களில் விநாயகர் சிலைகள்வைத்து வழிபாடு நடத்த உள்ளோம். திருப்பூரில் 1,200 இடங்களில் சிலைகள் வைக்கப்படும்.‘பிரிவினைவாதத்தை முறியடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம்’ என்ற தலைப்பில் நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.
திருப்பூரில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். வீடுகளில் விநாயகர் சிலைகள் வைப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
1983 முதல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போதிலிருந்தே அதிமுக, திமுக என இரு அரசாங்கமும் விநாயகர் சதுர்த்தி விழாவைத் தடை செய்ய முயல்கின்றனர்.
இதையும் தாண்டி ஒவ்வோர் ஆண்டும் விமரிசையாக கொண்டாடி வருகிறோம். நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி விழாசிறப்பாக நடைபெற அரசு ஒத்துழைக்க வேண்டும். வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக வந்து, திருப்பூரில்மாவோயிஸ்ட்கள் தங்கி இருக்கிறார்கள். தமிழக உளவுத் துறை சரிவரச் செயல்படுவதில்லை.