கோவை: ரஷ்யா-உக்ரைன் இடையான போரின் காரணமாக உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் நாடு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் மருத்துவ படிக்க உயிரை பணயம் வைத்து உக்ரைன் செல்கின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், அங்கு பல்வேறு இடங்களில் மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் நாடு திரும்பினர். கடந்த 6 மாதத்துக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. அந்நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் போர் பதற்றம் இருக்கிறது. மேற்கு பகுதியில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்த மேற்கு பகுதியில் தான் அதிகமாக மருத்துவ பல்கலைக்கழங்கள் இயங்கி வருகிறது.
இப்பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வந்த நிலையில், தற்போது மாணவர்களை திரும்பவும் பல்கலைக்கழகத்திற்கு வர அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, ரஷ்ய போரின் போது அங்கிருந்து இந்தியாவிற்கு தப்பி வந்த இந்திய மருத்துவ மாணவர்கள் மீண்டும் உக்ரைனுக்கு செல்ல முன்வந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம், ஆன்லைன் மூலம் படிப்பது செல்லாது என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது என மாணவர்கள் தரப்பில் கூறுகின்றனர். இதனால், இந்திய மாணவர்கள் பலர் தங்களின் உயிரை பணயம் வைத்து மீண்டும் உக்ரைனுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.
இது தொடர்பாக, திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் ஜீனோவின்ஸ் (27) கூறியதாவது: உக்ரைன் வின்னிட்சியா தேசிய பைரோகோவ் மெமோரியல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5-ம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு இன்னும் 6 மாத காலம் தான் வகுப்பு உள்ளது. போர் காரணமாக கடந்த பிப்ரவரியில் இந்தியா திரும்பினேன். தற்போது, மீண்டும் பல்கலைக்கழகம் அழைத்ததால், கடந்த மூன்று வாரத்திற்கு முன்பு டூரிஸ்ட் விசா மூலமாக திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்று, அங்கிருந்து மால்டோவா சென்றேன். பின்னர், மால்டோவில் இருந்து பேருந்து மூலம் சுமார் 300 கி.மீ. பயணித்து பல்கலை.,க்கு வந்தேன். இங்கு விடுதியில் தங்கியுள்ளேன்.
போரின் தாக்கம் அதிகமாக இருந்த பிப்ரவரி மாதத்தில் தினமும் போர் அபாய எச்சரிக்கை மணி 25 முறை வரை ஒலிக்கும். தற்போது, 4 முதல் 5 முறை தான் ஒலிக்கிறது. இங்குள்ள பொதுமக்கள் ராணுவத்தில் இருப்பதால், அவர்களுக்கு போர் குறித்த எவ்வித பயமும் இல்லை. சாதாரணமாக இருக்கின்றனர். அனைத்து பார்கள், கேளிக்கை விடுதிகள் வழக்கம் போல் செயல்படுகிறது. எங்கள் வகுப்பறை மற்றும் பல்கலைக்கழகத்தின் ஜன்னல்களில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. திடீர் தாக்குதல் நடந்தால், பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை செய்துள்ளனர்.
மேலும், இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை யாரும் வெளியில் செல்ல கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவசர உதவிக்கு போலீசாரை தான் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களின் உதவியுடன் தான் வெளியில் செல்ல முடியும். இங்கு மாணவர்கள் வருவது என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ஆபத்து எப்படி இருக்கும், போர் எப்படி இருக்கும் என இங்கிருந்த அனைவருக்கும் தெரியும். அதனால், உயிரை பணயம் வைத்து வர வேண்டியுள்ளது. எப்படியாவது, என் மருத்துவ படிப்பை முழுமை செய்த பின் மீண்டும் இந்தியா திரும்ப உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், பிகாரை சேர்ந்த நான்காம் ஆண்டு மருத்துவ மாணவர் அனுராக் கிருஷ்ணா கடந்த ஜூலை 7-ல், டெல்லியில் இருந்து விமானம் மூலம் துருக்கி இஸ்தான்புல் சென்று, அங்கிருந்து மால்டோவா வழியாக பேருந்து மூலம் உக்ரைன் சென்றுள்ளார். மேலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த நவநீத ஸ்ரீராம் (22) என்ற மாணவர் தனது நண்பர்களுடன் விரைவில் மால்டோவா வழியாக உக்ரைன் செல்ல திட்டமிட்டுள்ளார். ஒன்றிய, மாநில அரசுகள் உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் மீண்டும் அவர்களின் படிப்பை இந்தியாவில் தொடர வாய்ப்பு அளிக்காத நிலையில், மாணவர்கள் தங்களின் உயிரையும் பணயம் வைத்து மீண்டும் போர் களத்திற்குள் புகுந்துள்ளனர்.