திருவனந்தபுரம்: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த மாதம் 17ம் தேதி நடைபெற்றது. இதை எழுதிய லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள், கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கேரளாவில், கொல்லம் மாவட்டம், ஆயூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் தேர்வு எழுத வந்த சில மாணவிகளின் உள்ளாடைகளை அவிழ்த்து சோதனை செய்தது சர்ச்சையானது. நாட்டின் வேறு சில இடங்களிலும் இதுபோல் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கேரளாவில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்தால், தங்களால் முறையாக தேர்வு எழுத முடியாமல் போனதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரித்த தேசிய தேர்வு முகமை, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு அடுத்த மாதம் 4ம் தேதி மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பை வழங்கியுள்ளது. விரும்பும் மாணவிகள் மட்டும் தேர்வு எழுதலாம் என்றும் கூறியுள்ள அது, கடந்தமுறை குற்றச்சாட்டு உள்ளான கொல்லம் ஆயூர் கல்லூரிக்குப் பதிலாக, வேறு கல்லூரிக்கு தேர்வு மையத்தை மாற்றியுள்ளது.