சென்னை: உலக அளவிலான இளைஞர் இயக்கங்களில் ஒன்றான சாரணர் இயக்கத்தின் தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக பேரியக்கங்களில் ஒன்றான சாரணர் இயக்கம் 1907-ல் பேடன் பவல் என்பவரால் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் செயல்பாடாக, 1908-ம் ஆண்டு ஜனவரி 24-ல் ஆண்கள் சாரணர் குழுவை அவர் உருவாக்கினார். நாளைய குடிமக்களான இளைய தலைமுறையினருக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கீழ்ப்படிதல், பெரியோரை மதித்து நடத்தல் போன்ற நற்பண்புகளை வளர்க்கும் இயக்கமாக சாரணர் இயக்கம் தோன்றியது.
ராணுவ கட்டுக்கோப்பு இளைய தலைமுறையினரிடம் வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் ராணுவ வீரரான பேடன் பவல் 1908-ம் ஆண்டு ஜனவரி 24-ல் ஆண்கள் சாரணர் குழுவை அவர் உருவாக்கினார். ‘பாய் ஸ்கவுட்ஸ்’ என்று அழைக்கப்பட்ட இதுவே முதல் சாரணர் படை ஆகும்.
1909-ல் இந்தியாவிலும், சிலி நாட்டிலும், 1910-ல் அமெரிக்காவிலும் சாரணர் குழு உருவானது. 10 ஆண்டுகளுக்குள்ளாகவே உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு இந்த இயக்கம் விரிவடைந்துவிட்டது. நாட்டுப்பற்று, இறைப்பற்று, அன்பு, கருணை, பணிவு, பிறருக்கு உதவி செய்தல், தன்னம்பிக்கை முதலான பண்புகளை சிறுவர்களிடத்தில் வளர்த்து அவர்களை சிறந்த குடிமக்களாக உயர்த்துவதே சாரணர் இயக்கத்தின் நோக்கமாகும்.
இந்த நிலையில் தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சாரண, சாரணியர் இயக்க மாநில முதண்மை ஆணையராக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள தேசிய சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைமையகம் உள்ளது .
கடந்த முறை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், இம்முறை அமைச்சர் அன்பில் மகேஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் சாரண, சாரணியர் இயக்க தலைவராக பதவி வகித்துள்ளனர்.