ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ,ஆசிய வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று ஆரம்பம்

ஆசிய வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று (27) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமாகிறது.

அனைத்து போட்டிகளும் இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி ஊடான வலையமைப்பான வசந்தம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இன்றைய போட்டித் தொடருக்கான ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து முதல் போட்டியாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

அதனை தொடர்ந்து மறுநாள் (28) நடைபெறும் போட்டியில் சர்வதேச ரீதியில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெற்றியுடன்  தொடங்க இரு அணிகளும் விளையாடும் என்பதால்  பரபரப்புக்கு குறைவிருக்காது.

இலங்கை அணியில் குசல் மென்டிஸ், அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, ஹசங்கா உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர்.

அதே சமயம் ஆப்கானிஸ்தான் ரஷித்கான், முகமது நபி, ஹஸ்ரத்துல்லா ஷசாய், ஜட்ரன் ஆகியோரைத் தான்  நம்பி இருக்கிறது. இவர்கள் ஜொலித்தால் தான் இலங்கைக்கு சவால் அளிக்க முடியும்.

அமீரக ஆடுகளங்கள் பொதுவாக சுழலுக்கு ஓரளவு கைகொடுக்கும். இங்கு பகலில் வெயில். இரவில் புழுக்கத்தில் வியர்த்து கொட்டும். இத்தகைய சூழலை திறம்பட சமாளிக்கும் அணிக்கே வெற்றி வாய்ப்பு கனியும். 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு ஒரே ஒரு முறை சந்தித்துள்ளன.

2016-ம் ஆண்டு நடந்த அந்த போட்டியில் இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 

இந்த ஆசிய வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் 1984-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுக்கு  ஒரு முறை நடத்தப்படும் இந்த போட்டி அரசியல் பிரச்சினை பாதுகாப்பு உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் சில முறை இடம்பெறவில்லை.

கொரோனா பாதிப்பு காரணமாக 2020-ம் ஆண்டு போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக 2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி, வங்காளதேசத்தை கடைசி பந்தில் தோற்கடித்தது.

அடுத்த ஆண்டு 50 ஓவர் உலக வெற்றிக்கிண்ண போட்டி நடைபெறவுள்ளதால்  அடுத்த ஆசிய வெற்றிக்கிண்ண போட்டி 50 ஓவர் வடிவில் நடத்தப்படும்.

ஆரம்பத்தில் ஆசிய வெற்றிக்கிண்ண கிரிக்கெட் தொடர் 50 ஓவர் வடிவில் நடத்தப்பட்டது. அதன் பிறகு 20 ஓவர் வடிவம் புகுத்தப்பட்டது. அதாவது அந்த சமயத்தில் எந்த உலக வெற்றிக்கிண்ண  போட்டி நெருங்கி வருகிறதோ அதற்கு சிறந்த முறையில் தயாராகும் பொருட்டு அந்த வடிவில் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் 20 ஓவர் (T20) உலக கிண்ண  கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால் ஆசிய வெற்றிக்கிண்ண 20 ஓவர் வடிவில் இடம்பெறுகிறது.

இந்த போட்டித் தொடரில் சூப்பர் 4 சுற்றுக்கு வரும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் -2 இடங்களை பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் பிரவேசிக்கும்.

ஆசிய வெற்றிக்கிண்ண   கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா தான் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 7 முறை வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன. இந்த முறை சரிசம பலத்துடன் களம் காணும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளில் ஒன்றே வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றும் என்பது பெரும்பாலான கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பாகும். அத்துடன்  இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நாளை மோதும் ஆட்டம் தான் இந்த தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. விராட் கோலி- பாபர் அசாம் ஆகியோரில் யாருடைய கை ஓங்கும் என்பது தொடர்பான முன்னாள் வீரர்களின் புள்ளி விவர விவாதங்கள், ஆரூடங்கள் இப்போதே ஆர்வத்தை தூண்டியுள்ளன.

விரைவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால் அந்த போட்டிக்கு தங்கள் அணியை இறுதி செய்ய ஒவ்வொரு அணி நிர்வாகமும் தீவிரம் காட்டுவதால் அந்த வகையிலும் இந்த போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.