புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 16 மாதங்கள் பணியாற்றிய என்.வி ரமணா நேற்று ஓய்வு பெற்றார். உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின் விசாரணை நேற்று நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்தாண்டு ஏப்ரல் 24-ம்தேதி பதவி ஏற்றார். தலைமை நீதிபதியாக 16 மாதங்கள் பணியாற்றிய ரமணா நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதை முன்னிட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின் விசாரணை நேற்று முதன் முறையாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இஷ்டத்துக்கு இலவச அறிவிப்புகள் வெளியிடுவதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை அவர் விசாரித்தார்.
அதன்பின் டெல்லி உயர் நீதிமன்ற வக்கீல் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது. இதில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:
உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்பநான் பணியாற்றினேன் என நம்புகிறேன். என்னால் முடிந்த அளவுதலைமை நீதிபதியாக எனது கடமைகளை செய்தேன். உயர்நீதிமன்றங்களில் 234 நீதிபதிகளைநாம் வெற்றிகரமாக நியமித்தோம்.உச்சநீதிமன்றம் மற்றும் கொலீஜியத்தில் உள்ள சகோதர மற்றும்சகோதரி நீதிபதிகள் அளித்தஆதரவுக்கு நன்றி. டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு பல சிறப்புகள்உள்ளன. இங்குள்ள வழக்குகளின் எண்ணிக்கையை எந்த உயர்நீதிமன்றத்துடனும் ஒப்பிட முடியாது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாலை 8 மணி வரை பணியாற்றும் கடின உழைப்பாளிகள். பலர் காலையில் வந்து இரவுதான்செல்வர். இது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பிரியாவிடை நிகழ்ச்சியில் மூத்தவக்கீல் துஷ்யந்த் தவே கண்ணீர் மல்க பேசினார். அவர் கூறுகையில், ‘‘ இந்த நாட்டின் மக்கள் சார்பாக நான் பேசுகிறேன். மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு மக்களின் நீதிபதியாக நீங்கள் இருந்தீர்கள். அவர்களது உரிமைகளையும், அரசியலமைப்பு சட்டத்தையும் நீங்கள் நிலைநாட்டினீர்கள்’’ என்றார்.
நிலுவையில் உள்ள வழக்குகள்
பிரியாவிடை நிகழ்ச்சியில் உரையாற்றிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறுகையில், ‘‘நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், மிகப்பெரிய சவால்களாக உள்ளன.உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வழக்குகளை பட்டியலிடுவதில் அதிக கவனம் செலுத்தமுடியவில்லை. இதற்காக வருத்தப்படுகிறேன். இப்பிரச்சினைக்கு தீர்வு காண நவீன தொழில்நுட்பத்தையும், செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்த வேண்டும்’’ என்றார்.