காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே விவசாயத்தை கைவிட்ட பலரையும் மீண்டும் விவசாயத்தை நோக்கி வர வைத்துள்ளார் பட்டதாரி இளைஞர் ஒருவர்.
கல்லல் அருகேயுள்ள வேப்பங்குளம் ஊராட்சியில் புதுவேப்பங்குளம், பழைய வேப்பங்குளம், தேர்வலசை, அச்சினி, கல்குளம், சந்தனேந்தல் தெம்மாவயல் என 7 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 2,000 பேர் வசிக்கின்றனர். 600 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன.
வானம் பார்த்த பூமியாக உள்ள இக்கிராமங்களில் வறட்சி, விவசாய ஈடு பொருட்கள் கிடைப்பதில் சிரமம், விளைபொருட்களுக்கு விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் பலரும் விவசாயத்தை கைவிட்டனர்.
தனது தாயார் ஊரான வேப்பங்குளத்தில் விவசாயம் அழிந்து வருவதை அறிந்த எம்சிஏ பட்டதாரியான திருச்செல்வம், அதை மீட்டெடுக்க முடிவு செய்தார். இதற்காக 2019-ம் ஆண்டு அக்கிராம மக்களிடம் ரூ.5 லட்சம் வசூலித்து, அங்குள்ள கண்மாய்கள், வரத்துக் கால்வாய்களை சீரமைத்தார்.
அந்த ஆண்டு ஒரு சில மழைக்கே கண்மாய்கள் நிரம்பியதால், நெல் விவசாயம் செழித்தது. தொடர்ந்து விவசாயத்தில் உள்ள ஒவ்வொரு இடர்ப்பாடுகளையும் நீக்க நடவடிக்கை எடுத்தார். விளைந்த நெல்லை, சமூக வலைதளங்கள் மூலம் விற்பனைசெய்தார்.
கடந்த ஆண்டு வேளாண் அதிகாரிகள் உதவியோடு வேப்பங்குளத்தில் உழவர் உதவி மையம் அமைக்கப்பட்டது. இதன் ஒருங்கிணைப்பாளராக திருச்செல்வம் நியமிக்கப்பட்டார். இம்மையம் மூலம் விவசாயிகள் விளைவித்த மா, சப்போட்டா, எலுமிச்சை, நார்த்தை, புளி, பனங்கிழங்கு, இளநீர், தேங்காய், காய்கறிகள் ஆகியவை தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
விவசாயம் லாபகரத் தொழிலாக மாறத் தொடங்கியதால், விவசா யத்தை கைவிட்ட பலரும் மீண்டும் விவசாயத்துக்கு திரும்பினர். தற்போது உழவர் உதவி மையத்தினர் அரசு பரிந்துரைக்கும் தரமான நெல் விதைகளை கொள்முதல் செய்து, குறைந்த விலையில் விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று வழங்கி வருகின்றனர்.
அடுத்த கட்டமாக உழவு, நடவு, விதைப்பு பணிகள், உரத் தேவை குறித்து புள்ளி விவரங்களை சேகரித்து, அதற்கான தீர்வுக்கும் உழவர் உதவி மையத்தினர் தயாராகி வருகின்றனர். இதனால் 3 ஆண்டுகளில் தரிசாகக் கிடந்த 400 ஏக்கர் நிலங்கள் சாகுபடி பரப்பாக மாறியுள்ளன.
இது குறித்து திருச்செல்வம் கூறியதாவது: விதை நெல்லுக்காக விவசாயிகள் அலைவதை தவிர்க்க, வீடுகளுக்கே சென்று விநியோகிக்கிறோம். அடுத்ததாக உரங்களையும் வழங்க உள்ளோம். விவசாயிகள் விவசாயப் பணிகளை மேற்கொண்டால் போதும்.
விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர், இடுபொருட்கள் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுப்பதோடு, விளைபொருட்களை லாபகரமான விலையில் விற்கவும் ஏற்பாடு செய்து கொடுக்கிறோம், என்றார்.