நாகர்கோவில்: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு நடைபயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, குமரியில் செப். 7-ம்தேதி பயணத்தைத் தொடங்குகிறார்.
இதற்காக வரும் 7-ம் தேதி காலைசென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசும் ராகுல் காந்தி, பின்னர் நடைபயணத்தை தொடங்குகிறார். அன்று இரவு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் தங்குகிறார்.
செப். 8-ம் தேதி காலை அகஸ்தீஸ்வரத்தில் இருந்து கொட்டாரம், பொற்றையடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம் வழியாகச் சென்று, மாலையில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் நிறைவு செய்கிறார். 9-ம் தேதி காலை பார்வதிபுரம், சுங்கான்கடை வழியாக புலியூர்குறிச்சி, தக்கலை வழியாகச் சென்று முளகுமூடு புனிதமேரி பள்ளியில் தங்குகிறார்.
செப். 10-ம் தேதி காலை சாமியார்மடம், மார்த்தாண்டம், குழித்துறை, படந்தாலுமூடு வழியாக தலைச்சன்விளை சென்று, இரவு செருவாரகோணம் பள்ளியில் தங்குகிறார். செப். 11-ம் தேதி முதல் கேரளத்தில் அவரது சுற்றுப்பயணம் தொடங்குகிறது.
தொடர்ந்து, 12 மாநிலங்கள் வழியாக மொத்தம் 150 நாட்கள், 3,570 கி.மீ. தொலைவு நடைபயணம் மேற்கொண்டு, காஷ்மீர் செல்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல்காந்தி நடைபயண ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஜோதிமணி, எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி, மேலிடப் பொறுப்பாளர் வல்லபபிரசாத் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.