சென்னை: குற்றவாளிகள் தப்ப முடியாது என முதலமைச்சர் உறுதி அளித்தார் என மரணமடைந்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கைகளும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சென்னை வந்து இன்று காலை 10 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் சந்தித்து மனு கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என முதல்-அமைச்சர் உறுதி அளித்துள்ளார், முதல்-அமைச்சரை முழுமையாக நம்புகிறோம் என்றார். தனியார் பள்ளி நிர்வாகம் தவறு செய்ததால்தான், சிசிடிவி காட்சிகளை தர மறுக்கிறது என்றும் குற்றம் சாட்டினர்.