தனிநபர்களுக்கு கடந்த 1971ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்க கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையத்தில் உள்ள கரியபெருமாள் கோவிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிலத்தை மீட்டு கோவில் வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, 1971ஆம் ஆண்டு இந்த நிலங்கள் தனியாருக்கு பட்டா போட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து வழக்கு தொடராமல், பட்டா வழங்கியதை மறைமுகமாக செல்லாததாக்கும் வகையில், நீதிமன்றத்தின் அதிகாரவரம்பை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, வழக்கை 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த அபராதத் தொகையை, 15 நாட்களில் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.