கோவை: சிங்காநல்லூர் – வெள்ளலூர் வழித்தடத்தில், பழைய பாலத்தை இடித்து அகற்றி, புதிய பாலத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை சிங்காநல்லூர் சந்திப்பில் இருந்து வெள்ளலூருக்கு செல்லும் சாலையில் நொய்யலாற்றின் குறுக்கே கடந்த 62 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் பழுதடைந்தது. இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத்துறையின் ஊரக சாலைகள் பிரிவின் சார்பில் ரூ.4 கோடியே 40 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, பழைய பாலத்தை இடித்து அகற்றும் பணி கடந்த டிசம்பரில் தொடங்கியது. சற்று தொலைவில் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
இந்நிலையில், கனமழையினால் நொய்யலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக தற்காலிக தரைப்பாலம் இருமுறை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது அங்கு மூன்றாவது முறையாக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
பழைய பாலத்தை இடிக்கும் பணி மந்தகதியில் நடந்துவருகிறது. தற்காலிக பாலம் அடிக்கடி நீரில் அடித்து செல்லப்படுவதால், புதிய பாலம் கட்டும் பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, பொதுமக்கள் கூறும்போது, ‘‘சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. புதிய பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் விரைவாக முடிக்க வேண்டும்.
அதுவரை வாகனங்கள் தடையின்றி செல்லும் வகையில், தற்காலிக தரைப்பாலத்தை, வேகமான நீரோட்டத்தை தாங்கும் வகையில் பலமாக அமைக்க வேண்டும். இங்கு வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி வாகனங்கள் வெள்ளலூருக்கு செல்ல வேண்டியுள்ளது’’ என்றனர்.
நெடுஞ்சாலைத்துறையினர் கூறும்போது, ‘‘பழுதடைந்த பாலத்தில் 20 சதவீதம் இடிக்கப் பட்டு விட்டது. இப்பாலத்தின் மீது சிங்காநல்லூர் – குறிச்சி பகுதிக்கான குடிநீர் பகிர்மானக் குழாய் பதிக்கப்பட்டு இருந்ததால், அதை மாற்றும் வரை பாலத்தை தொடர்ந்து இடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தற்போது குடிநீர் பகிர்மானக் குழாய் தற்காலிக பாலத்தை ஒட்டி மாற்றி அமைக்கப் பட்டுவிட்டது.
நொய்யல் நீர் செல்லும் வகையில் தற்காலிக பாலத்தில் 12 குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. பழுதடைந்த பாலத்தை இடிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இப்பணி முடிந்ததும், அதே இடத்தில் 53 மீட்டர் நீளம், 13 மீட்டர் அகலத்தில் புதிய பாலம் கட்டப்படும். பாலத்துக்கு இரு பகுதியிலும் தலா 100 மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப் படும்’’ என்றனர்.