சில நிறுவனங்களின் காப்புரிமை காலாவதியாவதால் 45 வகை மருந்துகளின் விலை மாற்றியமைப்பு; தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தகவல்

புதுடெல்லி: சில நிறுவனங்களின் காப்புரிமை காலாவதியாவதால் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கான 45 வகை மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மாற்றியமைத்துள்ளது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ), நாடு முழுவதும் மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணை-2013-ன்படி சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 45 வகையான மருந்துகளின் சில்லறை விலையை மாற்றி அமைத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஜலதோஷம், நோய்த்தொற்றுகள், கண் தொடர்பான நோய்கள், அதிக கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் சிடாக்ளிப்டின் +மெட்ஃபோர்மின் ஹைட்ரோகுளோரைடு மற்றும் லினாக்ளிப்டின் + மெட்ஃபாமின் ஆகியவற்றின் கலவையின் ஒவ்வொரு மாத்திரையின் விலையை ரூ.16 – ரூ.21 வரை குறைத்துள்ளது.‘மெர்க் ஷார்ப் அண்ட் டோம் (எம்எஸ்டி)’ சிட்டாக்ளிப்டைன் மீதான காப்புரிமை கடந்த மாதம் காலாவதியானது.

லினாக்ளிப்டின்+மெட்ஃபாமின் மீதான காப்புரிமையும் அடுத்த மாதம் காலாவதியாகிவிடும். அதனால் இந்த மாத்திரைகளின் விலையை என்பிபிஏ குறைத்துள்ளது. மேலும் அலர்ஜி, சளி போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படும் பாராசிட்டமால், பினைல் ஃபிரைன், ஹைட்ரோகுளோரைடு, காஃபின் மற்றும் டிபன் ஹைட்ராமென் ஹைட்ரோகுளோரைடு ஆகியவற்றின் விலை ரூ.3.73 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்டிபயாடிக் மருந்தாகப் பயன்படுத்தப்படும் அமோக்ஸிசிலின் மற்றும் பொட்டாசியம் கிளாவுலனேட் சஸ்பென்ஷன் சிரப்பின் விலை ரூ.163.43 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.