சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில் கடந்த 23-ம் தேதி இரவு 8.30 மணியளவில் புறப்படத் தயாராக இருந்தது. இந்த ரயிலின் பெண்கள் பெட்டியில் மர்மநபர் ஒருவர் ஏறினார். பாதுகாப்புப் பணியிலிருந்து பெண் காவலர் ஆசிர்வா, இதனைப் பார்த்தும் அந்த நபரை அங்கிருந்து இறங்கும்படி கண்டித்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி, தான் மறைந்துவந்திருந்த கத்தியை எடுத்து ஆசிர்வாவின் கழுத்திலும், நெஞ்சிலும் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.
கத்தி குத்துடன் ரயிலிலிருந்து குதித்த பெண் காவலர் அங்கிருந்து ஓடிவரும் சி.சி.டி.வி காட்சிகள் சமீபத்தில் வெளியானது. அங்கிருந்தவர்கள், காவலரை மீட்டு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதனையடுத்து, காவலரைக் குத்திய மர்ம ஆசாமியைக் கண்டுபிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த இடத்தில் சி.சி.டி.வி கேமரா இல்லாததினால், குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இருந்தபோதிலும், சுற்றுவட்டாரத்திலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், நேற்று எழும்பூர் ரயில்வே போலிஸார் திண்டிவனம் அருகேயுள்ள கம்பூர் பகுதியைச் சேர்ந்த தனசேகரன் என்பவரைக் கைது செய்தனர். இந்த கைது தொடர்பாக என்ன நடந்தது என்று தனிப்படை காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம், “காயமடைந்த காவலர் ஆசிர்வா தன்னை தாக்கிய மர்ம ஆசாமியின் அங்க அடையாளங்களை எங்களிடம் சொல்லியிருந்தார். சி.சி.டி.வி பதிவுகளின் அடிப்படையில் அந்த உருவத்திலிருந்தவர்களை தேடினோம். பல சி.சி.டி.வி காட்சிகளிலும் அப்படி ஒரு உருவம் சிக்கவில்லை.
அதற்கு முன்பாக ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்தவர்கள் மற்றும் ரயில் நிலையத்தை ஒட்டி இருந்தவர்களிடம் விசாரணையை விரிவுபடுத்தினோம். கடைசியில் ரயில் நிலையம் எதிரே பூக்கடை வைத்திருக்கும் பெண் ஒருவரின் கணவரின் உடல் அமைப்பு காவலர் சொன்னதோடு ஒத்துப்போனது. இதனையடுத்து அவரின் புகைப்படத்தை ஆசிர்வாவிடம் காட்டி உறுதிசெய்துகொண்டோம். இதைத் தொடர்ந்து தனசேகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.
கைது செய்யப்பட்ட தனசேகரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் ரயிலில் பூ, பழம் விற்பனை செய்யும்போது ரயில்வே போலீஸார் விற்பனைக்கு பல்வேறு இடைஞ்சல் கொடுத்ததாகவும். ரயிலில் வியாபாரம் செய்யவிடாமல் இறக்கி விட்டதாகவும் கூறியுள்ளார். இதனால், கடந்த சில ஆண்டுகளாகச் சென்னை பூக்கடை பகுதியில் உள்ள நடைபாதையில் தங்கி பூ, பழம், செல்போன் பவுச் போன்ற பொருள்களை வியாபாரம் செய்ததாகத் தெரிவித்திருக்கிறார். தனசேகரன் ரயில்வே காவலர்கள் மீது நீண்டநாள்களாக கடும் ஆத்திரத்திலிருந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று மது போதையில் தனசேகரன் பெண்கள் பெட்டியில் எறியுள்ளார்.
அப்போது அங்கு பணியிலிருந்து ஆசிர்வா அவரை இறங்கச் சொன்னதும் ஆத்திரமடைந்த தனசேகரன் தான் பூ அறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்துக் குத்திவிட்டுத் தப்பித்து ஓடிவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். காயமடைந்த காவலர் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக ரயில்வே காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்து பெண் காவலர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அனைத்து ரயில் நிலையங்களிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்தவேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர் கோரிக்கை வைத்துவருகிறார்கள்.