சென்னை: சென்னை வடபழனி பகுதியில் தங்கும் விடுதியின் மீது நேற்று இரவு பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதில் தீ பிடித்து எரிந்தன; கண்ணாடிகள் உடைந்தன. நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து விடுதியின் வரவேற்பு அறையின் மீது வீசிவிட்டு சென்றனர். இந்த பெட்ரோல் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் அங்கிருந்த கண்ணாடிகள் நொறுங்கியது; மர பொருட்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது,
இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியோடி விட்டனர். நடந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விருகம்பாக்கம் போலீசார் விடுதியின் வரவேற்பு அறையின் மீது பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பி சென்ற நபர்கள் யார் என்பது குறித்து விடுதி மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தமீம் அன்சாரி என்பவர் சென்னை வடபழனியில் 21 அறைகள் கொண்ட தங்கும் விடுதியை சொந்தமாக நடத்தி வருகிறார். அந்த விடுதியின் மீது நேற்று இரவு நடைபெற்ற பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்விரோதம் காரணமாக பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு விருகம்பாக்கம் அடுத்துள்ள எம்.ஜி.ஆர் நகரில் இரு கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.