சோனாலி போகாட் மரண வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநில பாஜக மூத்த தலைவரும் நடிகையுமான சோனாலி போகட் (42), கடந்த 22-ம் தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்றார். மறுநாள் இவர் மர்மமான முறையில் இறந்தார். சோனாலி போகட் மாரடைப்பால் இறந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தினர் சோனாலியின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கோவா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில், கோவா கிளப் ஒன்றில் நடிகை சோனாலி, அவரது உதவியாளர்கள் சுதிர் சங்வான், சுக்விந்திர் சிங் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது சோனாலியை அவர்கள் கட்டாயப்படுத்தி குளிர்பானம் ஒன்றை குடிக்க வைத்த சிசிடிவி வீடியோ காட்சிகள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளன. குளிர்பானத்தில் போதைப் பொருள் கலந்து கொடுத்ததை சோனாலியின் உதவியாளர்கள் சுதிர் சங்வான், சுக்விந்திர் சிங் ஒப்புக் கொண்டனர். கிளப்பின் கழிவறையில் இருந்து போதைப் பொருட்கள்ளையும் போலீசார் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து, சோனாலியின் உதவியாளர்கள் சுதிர் சங்வான், சுக்விந்திர் சிங் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் கிளப்பில் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதால் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் தன்மை குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை,” என்று கோவா காவல்துறை தெரிவித்துள்ளனர். சோனாலிக்கு கொடுக்கப்பட்ட போதைப்பொருளின் வீரியம் குறித்து ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
சோனாலி போகாட் மரண வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக சோனாலி போகட்டின் உடற்கூராய்வு பரிசோதனையில் அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரிய வந்தது. இதனால் சோனாலி போகட் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. மேலும் சோனாலி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் -ஆயுள் மற்றும் 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM