சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், சுமார் 600 பக்க விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவர் சுமார் 75 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில், அவருடன் சசிகலா மட்டுமே தங்கியிருந்தார். வேறு யாரும் அவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. மேலும், அங்கிருந்த சிசிடிவி காமிராக்களும் அகற்றப்பட்டன.
75நாட்கள் மர்மமான முறையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், டிசம்பர் 5-ந்தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார் என அறிவிக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்திய .ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்த போராட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, ஆறுமுகசாமி ஆணையம் ஜெ.வுக்கு நெருக்கமானவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள், காவல்துறையினர் என 158 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. இடையில் அப்போலோ தொடர்ந்த வழக்கு காரணமாக ஆணையம் செயல்படுவதில் தடை ஏற்பட்டது. பின்னர் உச்சநீதிமன்ற அனுமதியுடன் விசாரணை நடத்தி வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் மூன்றாவது கட்டமாக விசாரணை தொடங்கியது. சில வாரங்களில் 3-வது கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அப்போது 12 முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
இதையடுத்து ஆணையத்தின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. தொடர்ந்து இறுதி அறிக்கை தயார் செய்யும் பணியை ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வந்தது. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை ஆவணங்களை ஆய்வு செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்தது.
முதலில் 550 பக்கங்கள் கொண்ட அறிக்கையாகத்தான் ஆறுமுகசாமி ஆணையம் தயார் செய்து இருந்தது. அப்பல்லோ மருத்துவமனை கேட்டுக்கொண்டபடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்த கருத்துக்கள் சுமார் 50 பக்கங்கள் சேர்க்கப்பட்டன. இதனால் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை 600 பக்கங்களாக அதிகரித்தது.
எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை மற்றும் ஆணையம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 600 பக்கங்களை கொண்ட இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என தனித்தனியாக இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையின் போது தெரியவந்த முக்கிய அம்சங்கள் என தனியாக 200 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையும் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதாவது, இறுதி அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டும் வகையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி இன்று காலை தாக்கல் செய்தார்.