தகவல் பதிவு உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்கள் – 912 பேருக்கு பணிநியமன ஆணையை முதல்வர் வழங்கினார்

சென்னை: தகவல் பதிவு உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு 912 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.8.2022) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 912 பேருக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர், காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 8 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

2021-22 ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையில், காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களின் குறைகளை கனிவோடு கேட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் மறைந்த காவலர்களின் வாரிசுகள் 1132 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படும் என்று 13.9.2021 அன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி, காவல்நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 1132 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்டமாக 457 ஆண்கள் மற்றும் 455 பெண்கள் என மொத்தம் 912 வாரிசுதாரர்களுக்கு தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடத்திற்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 8 நபர்களுக்கு முதல்வர் பணிநியமன ஆணைகளை வழங்கினார். இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள காவல்நிலையங்கள் மற்றும் ரயில்வே காவல் நிலையங்களில் பணியமர்த்தப்படுவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திர பாபு, காவல்துறை கூடுதல் இயக்குநர் சைலேஷ் குமார் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.