நெல்லை: தமிழகத்தில் பாஜகவிற்கு இரண்டு தலைவர்கள் உள்ளனர், ஒருவர் அண்ணாமலை மற்றொருவர் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி என நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதில் ஆளுநர் ரவி மிக சிறப்பாக செயல்படுகிறார் அண்ணாமலை விளம்பரத்திற்காக முரண்பாடான தகவல்களை சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். ராகுல் காந்தி வருகிற 7- ந்தேதி இந்திய நாட்டை ஒருங்கிணைக்கும் நடை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்குகிறார்.
இது தொடர்பாக நெல்லை, தென்காசி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நெல்லை பாளையங்கோட்டை தனியார் மண்டபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி இவ்வாறு தெரிவித்தார்.
செப்டம்பர் ஏழாம் தேதியன்று, கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி தொடங்கும் நடைபயணம் காங்கிரஸ் கட்சியினர் இடையே மகிழ்ச்சியை, அங்கீகாரத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்திய எல்லைக்குள் வாழும் அனைவரும் இந்தியர், சமயம் மொழி, இனம் பாகுபாடு இல்லாத இந்தியா, மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, ஜி எஸ் டி வரி விதிப்பால் வியாபாரிகள் அவதி உள்ளிட்ட பிரச்சனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் ராகுல் காந்தி இந்தப் பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார் என்று அழகிரி தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்த பயணம் தமிழகத்தில் நான்கு நாட்கள் நடக்கிறது, ராகுல்காந்தியின் நடைப்பயணம் இந்திய அலசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இந்தியா பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பொருளாதாரம் 9 சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்தது ஆனால் தற்போது 7 சதவீதமாக என்று அழகிரி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டவர்கள் கட்சியை விட்டு விலகிச் சென்றுள்ளது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இன்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்பதாலும், அவர்களுக்கு பதவி இல்லை என்பதாலும் விலகிச் செல்கின்றனர். இது போன்றவர்கள் விலகிச் செல்வதால் காங்கிரஸ் கட்சி சுத்தமடைந்து வருகிறது என்பதை உணர்வதாக அழகிரி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி 100 ஆண்டுகளில் மிகப்பெரிய எழுச்சி வீழ்ச்சி துரோகம் என பல்வேறு நிகழ்வுகளை சந்தித்துள்ளது என்பதால், இது பெரிய விஷயம் அல்ல என்றும், காங்கிரஸ் அதிகாரத்திற்காக தொடங்கிய கட்சி அல்ல மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தரவும் சமூக நீதியை நிலைநாட்டவும் தொடங்கப்பட்ட இயக்கம் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் பாஜகவை பொறுத்தவரை இரண்டு தலைவர்கள் செயல்பட்டு வருகிறார்கள் ஒருவர் அண்ணாமலை மற்றொருவர் தமிழக ஆளுநர் ரவி இதில் ரவி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் அண்ணாமலையை பொருத்தவரை விளம்பரத்திற்காகவும் தினமும் தன்னை பற்றி செய்திகள் வர வேண்டும் என்பதற்காகவும் முரண்பாடாக பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார் என தெரிவித்தார்.
பேட்டியின் போது முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர் எம்.பி, முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு ஆகியோர் உடனிருந்தனர்.