திருவாடானை: தமிழின் பெருமையையும் தொன்மையையும் பறைசாற்றிய பனை மரங்களை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மனித குலத்தின் தொடக்க கால வாழ்க்கையானது மரத்தடிகளிலும் பாறை இடுக்குகளிலும் குகைகளிலும் வாழ்க்கையை கழித்து வந்துள்ளனர். நாடோடியாக வாழ்ந்த மனிதன் இயற்கை வேளாண் தந்த அறிவு வளர்ச்சியால் நிலையான சமூகமாக வாழ தொடங்கினர்.
நாடோடியாக வாழ்ந்த மனிதர்கள் நிலையான வாழ்விடத்தை அமைக்க எண்ணிய எண்ணத்தால் குடிசை அமைப்பு வீடுகளை உருவாக்கினர். அந்தக் கால சூழ்நிலையில் வெயில் மழை குளிர் காற்று இன்ன பிற இயற்கை சீற்றங்களில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள பனை ஓலைகளை பயன்படுத்தி குடிசைகளை அமைத்து ஒரு புது விதமான வளர்ச்சியாக இருந்தது. மனித வளர்ச்சிக்கு முதலில் வித்திட்டது பனை ஓலைகள். அதன் அடுத்தகட்ட நாகரிக வளர்ச்சியாக பனை மரத்தை வெட்டி அதன் தண்டு பகுதியை பயன்படுத்தி ஓட்டு வீடுகள் கட்டப்பட்டது. அது அடுத்த கட்ட நாகரீக வளர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக வரலாற்றில் மனிதனுக்கு தொடக்கத்தில் இருந்தே பனை மரங்களினால் ஆன தொடர்பு இன்றுவரை நீடித்தே வந்திருக்கிறது.
இந்நிலையில் பனை மரங்கள் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளன. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் புதிய பனை மரங்களை நட வேண்டும் என கடந்த ஆண்டு ஒரே நாளில் 17 லட்சம் பனைமர விதைகள் நடப்பட்டன. இது ஒரு கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்படி நடப்பட்ட பனை மரங்கள் முளைத்துள்ளனவா பராமரிக்கப்பட்டுள்ளனவா என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. புதிதாக பனை விதைகள் மாவட்டம் முழுவதும் நீர் நிலைகளில் நடப்பட்டு வருகிறது ஓரளவு ராமநாதபுரம் மாவட்டத்தில் பனை மரங்கள் நட வேண்டும் என்ற சமூக அக்கறை உருவாகியுள்ளது. அதே சமயத்தில் பல நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் பனை மரங்களை வெட்டி அளிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு தான் வருகிறது. அதனால் தான் இன்றளவும் பனை மரங்கள் வெட்டி அளிக்கப்பட்டு வருவது கண்கூடாக தெரிகிறது. பனைகளில் 34 வகை உள்ளதாக கூறப்படுகிறது. இதில் கூந்தல் பனை என்ற வகை உள்ளது இந்த பனை இன்னும் திருவாடானை பகுதிகளில் அத்தி பூத்தார் போல் ஒரு சில கிராமங்களில் இருந்து வருகிறது.
பனை மரங்களை வெட்டக்கூடாது உயர் நீதிமன்றமும் தமிழக அரசும் தடை விதித்துள்ளது. ஆனால் அந்த உத்தரவுகள் சட்ட வடிவமாக மட்டுமே உள்ளது. இந்த சட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்து பனை மரங்கள் அழிக்கப்படுவதை முழுவதுமாக தடை செய்யவில்லை என்பதே உண்மை. பல லட்சம் மரங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் அளிக்கப்பட்டு விட்டன எஞ்சி நிற்கக்கூடியபனை மரங்களையாவது பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி வேம்பார் ஆகிய இடங்களில் பனங் கருப்பட்டி உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாநிலங்கள் வெளிநாடுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சாயல்குடி பகுதியில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் பனங்கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது அதே போன்று ராமநாதபுரம் ஒன்றியத்தில் தேவிபட்டினம் ஆற்றங்கரைபனைக்குளம் திருவாடானை தொகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பனை மரங்கள் அதிக அளவில் இருந்து வந்தது இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பிழைத்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது பனை மரங்கள் குறித்த மருத்துவ பயனும் மகிமையும் தெரியாத காரணத்தால் பனை மரங்கள் வெட்டப்பட்டு செங்கல் சூளைக்கு வெட்டி அளிக்கப்பட்டு வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 5 கோடி பனை மரங்கள் இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது ஆனால் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பனை மரங்கள் வெட்டி அளிக்கப்பட்டு வருகிறது இதனால் இப்போது 2 கோடி பனை மரங்கள் தான் எஞ்சி இருக்கும் என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் எஞ்சியுள்ள பனை மரங்களை பாதுகாக்கும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பனை மரங்களை எதற்காக பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பண்பாட்டை கூறும் பனைஓலை
கிறிஸ்து பிறப்பதற்கு முந்தையதாக காலம் கணிக்கப்பட்ட தமிழி எழுத்துக்கள் என்று நவீன காலத்தில் அழைக்கப்படுகின்ற தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் பனை என்கிற சொல் இடம் பெற்றுள்ளது. மேலும் எட்டுத்தொகை பத்துப்பாட்டு போன்ற சங்க இலக்கிய நூல்களிலும் பனை பேசும் பொருளாக இருக்கிறது. ஐம்பெரும் காப்பியங்கள் திருக்குறள் இன்ன பிற தமிழ் செவ்வியல் நூல்கள் யாவும் பனை ஓலையில் எழுதப்பட்டு நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. நவயுகம் துவங்கி காகிதம் உருவாகும் வரை நமது தமிழ் மொழியின் பொக்கிஷங்களை சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாத்து தந்த பெருமை பனை ஓலைகளுக்கு உண்டு. இப்போது உள்ள காகிதத்தின் ஆயுட்காலம் 100ஆண்டுகள்தான் எனக் கூறுகின்றனர். ஆனால் ஓலை சுவடிகள் பல நூற்றாண்டை கடந்து எழுதப்பட்ட எழுத்துக்களை அப்படியே சுமந்து நிற்கும் தன்மை வாய்ந்தது.