விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியிலிருந்து 1,502 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்” செயல்படுத்தப்படும் என கடந்த அதிமுக ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விழுப்புரம் வந்திருந்தபோது அந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில், தற்போது இந்த திட்டம் திமுக அரசால் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கூறி… அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில் இன்று திண்டிவனத்தில் கண்டன உண்ணாவிரதம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சி.வி.சண்முகம், “எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னை கோரிக்கையை ஏற்று 1,502 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அறிவித்தார்கள். மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு பகுதியிலிருந்து தொடங்கப்பட இருந்த இந்த திட்டம், ஒரு நாளைக்கு 60 எம்.எல்.டி குடிதண்ணீரை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக கொண்டு செல்லும்படி அறிவித்தார்கள். முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு கடல்நீரை குடிநீராக சுத்திகரித்து கொண்டு செல்லும் திட்டத்தை எடப்பாடியார் தொடங்கி வைத்தார். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இன்று முதல் அமைச்சராக இருக்கின்ற மு.க.ஸ்டாலின் அவர்கள், வாக்களித்த மக்களுக்கு சொன்ன திட்டங்களை நிறைவேற்ற தவறியதோடு மட்டுமின்றி… ஏற்கனவே மக்களின் நலனுக்காக அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையெல்லாம் ஒவ்வொன்றாக முடக்கி வருகிறார். இதுதான் வாக்களித்த மக்களுக்கு இந்த அரசு கொடுக்கும் நன்றி கடன்.
அரசியலுக்காக நாங்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவில்லை. அதிமுக-விற்கு பயனளிக்கக்கூடிய செயலுக்காக நாங்கள் போராடவில்லை. ஒட்டுமொத்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நலனுக்காக போராடுகின்றோம். விழுப்புரம் மாவட்டம் என்பது… கல்வி, தொழில் வாய்ப்புகளில் பின்தங்கிய மாவட்டமாகவும்; குடிநீர் தட்டுப்பாடுள்ள மாவட்டமாகவும் இருந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட மாவட்டத்தின் கல்வி மேம்பாட்டிற்காக, ஜெ.ஜெயலலிதா பல்கலைகழகத்தை விழுப்புரத்தில் செயல்படுத்தினார் எடப்பாடியார். அந்த பல்கலைக்கழகத்தை கட்டுவதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், இன்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அரசு, ‘நிதி இல்லை’ எனும் காரணத்தைச் சொல்லி அந்த பல்கலைக்கழகத்தை முடக்கி விட்டார்கள். இப்போது அந்த பல்கலைகழகத்தை கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில், செம்மண் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது.
இப்போதுதான் தெரிகிறது ஏன் அந்த பல்கலைக்கழகத்தை மூடினார்கள் என்று… பல வண்டிகளின் மூலம், அந்த இடத்தில் செம்மண் கொள்ளை அடிக்கப்படுகிறது. செம்மண் கொள்ளை அடித்தவர் யார் என்பது விழுப்புரம் மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் தெரியும். இன்று நீதிமன்றத்திற்கு தினந்தோறும் படியேறி செல்லும் அமைச்சர் யார் என்பதும் தெரியும். அந்த அமைச்சர், ஏன் இந்த பல்கலைக்கழகத்தை மூடினார் என்பது இன்றைக்கு தெரிந்துவிட்டது” என்று அமைச்சர் பெயரை குறிப்பிடாமல் சாடியவர், மேலும் தொடர்ந்தார்.
“விழுப்புரம் மாவட்டத்தில் பல்கலைக்கழகம் வந்தால்… மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கிடைக்கும். அப்போது அந்த அமைச்சருக்கு சொந்தமான கல்லூரிகள் செயல்படாது. மேலும், ஒலக்கூர், மயிலம் பகுதிகளில் திமுக-வை சேர்ந்தவர்கள் தனியார் பல்கலைக்கழகம் அமைக்கும் பணிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அரசுப் பல்கலைக்கழகம் இங்கு இருந்தால், இந்த பல்கலைக்கழகங்கள் செயல்படாது. அதற்காக, ஸ்டாலின் குடும்பத்தாரின் பினாமி பெயரிலே தொடங்கப்படும் இந்த பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும்… கொள்ளையடிக்க வேண்டும்… என்பதற்காகத்தான், அம்மா பெயரில் இருந்த பல்கலைக்கழகத்தை மூடினார்கள்.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் என்ன குறை கண்டீர்கள்? ஏன் ரத்து செய்தீர்கள்?
இதை ரத்து செய்துவிட்டு, மேட்டூரிலிருந்து தண்ணீர் கொண்டு வருவோம்” என்கிறார்கள். சொல்வதற்கு வேண்டுமானால் அது நன்றாக இருக்கலாம். திமுக-வினர் காதிலே பூ சுத்த பார்க்கிறார்கள்.
‘கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செயல்படுத்த 3000 ஆயிரம் கோடி ரூபாய் ஆகிறது. நாங்கள் மேட்டூரிலிருந்து நீர் கொண்டு வரும் திட்டத்திற்கு 5,500 கோடி ரூபாய் ஆகும். ஆனால் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் ஆண்டு பராமரிப்பு செலவு 80 கோடி; மேட்டூர் குடிநீர் திட்டத்திற்கு 32 கோடி தான்’ என்று கணக்கு சொல்கிறார்கள். நீங்களா பணத்தை கொடுக்கப்போகிறீர்கள்? சம்பந்தப்பட்ட சிப்காட் நிறுவனங்கள், அரசு மருத்துவமனை தருகின்ற நிதியே பராமரிப்புக்கு போதுமானது. பராமரிப்புக்கு சொல்கிறீர்களே, நீங்கள் சொல்லும் 5000 கோடிக்கு எவ்வளவு வட்டி ஆகிறது…? அவர்கள், திட்டத்தை ஆய்வு செய்து அறிவிப்பதற்குள் அதை 10,000 கோடி என்பார்கள். நவீன முறையிலே, விஞ்ஞான ரீதியிலே ஊழல் செய்வதில் கருணாநிதியை மிஞ்சிவிட்டார் அவரது மகன் ஸ்டாலின். கொள்ளை அடிப்பதில் அப்பாவை மிஞ்சியிருக்கிறார் ஸ்டாலின்.
இன்று போடப்படுகின்ற திட்டங்களை, நவீன முறையில் திருத்தி அறிவித்து, 20 – 25% கமிஷன் வாங்குவது தான் அவர்களின் நோக்கம்.
இன்று கமிஷன் அரசுதான் நடக்கிறது. அமைச்சர்கள் கமிஷன் ஏஜெண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை வசூலிக்கும் முதலாளிகளாக இருக்கும் மு.க.ஸ்டாலின் குடும்பம், தமிழகத்தை ஒரு வட்டிக் கடையாக நடத்திக் கொண்டிருக்கிறது.
ஒரு பக்கம் அவரின் மனைவி, மறுபக்கம் அவரின் மகன் உதயநிதி, இன்னொரு பக்கம் அவரது மருமகன்… இன்று தமிழ்நாடு முழுவதும் நிறைந்து இருக்கிறார்கள். திட்டத்தை அறிவித்து டெண்டர் விடும்போது கமிஷன் பெறுவதோடு மட்டுமின்றி, பில் கொடுக்கும்போதும் 10% கமிஷன் வேண்டுமாம். அப்புறம் எப்படி நல்ல ரோடு போடுவார்கள்… ஜீப் மீதும், தண்ணீர் பாம்பு மீதும் தான் போடுவார்கள்.
ஒரு உதாரணம் சொல்கிறேன். கோயம்புத்தூரில் அதிமுக ஆட்சியின்போது 60 ஏக்கர் அரசு நிலத்தில் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில், சுமார் 70 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்து கட்டடங்கள் கட்டப்பட்டு வரும் வேளையில், இன்று பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசு… புதியதாக 60 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி, அந்தப் பேருந்து நிலையத்தை வாங்கிய இடத்தில் அமைக்கப்போவதாக அறிவித்துள்ளது. அன்று மாலையே ஒரு விளம்பரம் வருகிறது. அது ‘ஜி ஸ்கொயர்’ விளம்பரம். அது யாருடையது என்றால் முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடையது. ஏற்கனவே நடைபெறும் பணியை நிறுத்தி, தனியார் நிலத்தை வாங்கி, பேருந்து நிலையம் கட்டுவதன் அவசியம் என்ன? இதனால் பயன் அடையப்போவது யார்?
போட்டோ ஷூட் நடத்தி கொண்டிருப்பது தான் முதலமைச்சரின் வேலையா..? ஸ்டாலின் அவர்களே, நீங்கள் சொன்ன திட்டங்கள்… நீட் தேர்வு ரத்து என்ன ஆனது. அன்று ஒரு அனிதாவிற்கு கூக்குரலிட்டீர்களே… இந்த ஓராண்டு காலத்தில் 22 பேர் வரை இறந்திருக்கிறார்களே… ஏன் வாயைத் திறக்கவில்லை?. ஏனெனில், அவருக்கு இதைப் பற்றி ஏதும் தெரியாது. ஸ்டாலின் இந்த உலகத்திலேயே இல்லை. இந்திரலோகத்திலே அழகப்பனை போல இருக்கிறார். இந்த நாட்டை பற்றி அவருக்கு கவலையில்லை.
விழுப்புரம் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட டைட்டில் பார்க்கை கட்டுவதற்குக் கூட துப்பில்லாத அரசாக உள்ளது இந்த திமுக அரசு. அதை தட்டி கேட்க வக்கில்லாமல் இங்கு இரு அமைச்சர்கள், அவர்களுக்கு கூஜா தூக்க சட்டமன்ற உறுப்பினர்கள்” என்றார் ஆவேசமாக.