தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேர் வடம்பிடித்தனர்.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆவணித் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. காலை 6.15 மணிக்குத் தேரோட்டம் தொடங்கியது. திருக்கோயில் இணை ஆணையர் (பொ) அன்புமணி வடம்பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
நேற்று காலை 6.15 மணிக்குப் புறப்பட்ட விநாயகர் தேர் நான்கு ரதவீதிகள் வழியாக காலை 6.45 மணிக்கு நிலைக்கு வந்தது. தொடர்ந்து, காலை 6.50 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கப் பெருமான் எழுந்தருளிய பெரிய தேர் வீதி உலா வந்து, காலை 7.35 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர், காலை 7.50 மணிக்கு அம்மன் தேர் திருவீதி வலம் வந்து, 8.20 மணிக்கு நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
நேற்று இரவு சுவாமி, அம்மன்பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி, திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சேர்ந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்துதிருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.