திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ரூ.50 கோடி மதிப்பில் உணவு பூங்கா அமைக்கப்படுகிறது. அதையொட்டி, 10 ஏக்கர் பரப்பளவில் குளிர்பதன கிடங்கு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் விவசாயத்தை மட்டுமே பிரதானமாக நம்பியிருக்கிறது. இந்த மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 6.31 லட்சம் ஹெக்டர். அதில், 1.92 லட்சம் ஹெக்டர் சாகுபடி பரப்பாகும். நெல், மணிலா, கரும்பு, வாழை ஆகியவை பிரதான சாகுபடி பயிர்கள். ஆறுகள், அணைகள் இருந்தாலும், கிணற்றுப் பாசனமும், ஏரி பாசனமும் விவசாயத்தை பெரிதும் தாங்கிப்பிடிக்கிறது.
மாநிலத்திலேயே அதிக எண்ணிக்கையில் சுமார் 1.82 லட்சம் பாசன கிணறுகள் இந்த மாவட்டத்தில் உள்ளன. இறவை பாசனத்தை சார்ந்திருக்கிற மாவட்டம் என்பதால், நெல் சாகுபடி அதிகம் நடக்கிறது. மேலும், நீர் கொள்ளளவில் பெரிய மற்றும் சிறிய ஏரிகள் உள்பட மொத்தம் 1,920 ஏரிகள் உள்ளன. ஆனாலும், மழை கைகொடுத்தால் மட்டுமே இந்த மாவட்ட விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும். மழை பொய்த்தாலும், பெருமழை பெய்தாலும் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும். விவசாயத்தை தவிர்த்து, வேறு எந்தவித தொழில் வாய்ப்புகளும், பொருளாதார மேம்பாட்டுக்கான ஆதாரங்களும் எதுவும் இல்லை.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் பொருட்களை கொள்முதல் செய்தல், பதப்படுத்துதல், சேமித்து வைத்தல், சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கான வாய்ப்பை உருவாக்கும் வகையில், மெகா உணவு பூங்கா அமைக்கப்படுகிறது. அதற்காக, திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில், ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில், பிரமாண்டமான உணவு பூங்கா உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், உணவு ெபாருட்களை பாதுகாக்கவும், பதப்படுத்தவும் வசதியாக 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கும், 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சாதாரண கிடங்கும் அமைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் தற்போது அமைக்கப்படும் மெகா உணவுப் பூங்காவில் அமைக்கப்படும் 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர் பதனக் கிடங்கை, தலா 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வேளாண் பொருட்களை பதப்படுத்தி பாதுகாக்கும் 10 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில், அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச வாடகையில், உணவு பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த உணவுப் பூங்காவில், வாழை, பால் தொடர்பான பொருட்கள், மசாலா பொருட்கள், குழந்தைகளுக்கான உணவு பொருட்கள், சிறு தானிய வகைகள் போன்றவற்றை பதப்படுத்தி பாதுகாக்கலாம். அதோடு, உணவு பொருட்களை பதப்படுத்தி, மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்படுகிறது. அதன்மூலம், வேளாண் பொருட்கள் பதப்படுத்தப்பட்டு விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குளிர்பதனக் கிடங்கு மற்றும் மதிப்பு கூட்டு கட்டமைப்பு, உணவு பதப்படுத்துதல், பாதுகாப்பு திறன்கள் உருவாக்கம், வேளாண் பதப்படுத்தும் தொகுப்புக்களுக்கான கட்டமைப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் தர உறுதி கட்டமைப்பு போன்றவை இந்த உணவு பூங்காவில் ஏற்படுத்தப்படுகிறது.
இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் உணவுப் பூங்கா அமைக்கும் பணிகள் முழுமையாக முடிந்து, பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான தீவிர முயற்சியில் வேளாண் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உணவுப் பூங்கா பயன்பாட்டுக்கு வந்தால், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டப்பட்டு, வெளி மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாய்ப்பு உருவாகும். அதேபோல், மணிலா, வாழை, சாமை, தினை, வரகு போன்ற சிறு தானியங்கள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு பெருகும். கொள்முதல் விலை உயரும். விவசாயிகளிடம் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு, தொழில் நிறுவனங்கள் உணவு தானியங்களை கொள்முதல் செய்யும் நிலை ஏற்படும்.
தொழில் முனைவோருக்கு அரிய வாய்ப்பு
அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு, உருவாகும் தொழில்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை அடையும். அதன்படி, வேளாண்மையை சார்ந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில், வேளாண் விளை பொருட்களை அடிப்படையாக கொண்டு அமையும் உணவுப் பூங்காவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு. அதன்மூலம், தொழில் முனைவோர்கள் அதிக அளவில் உருவாகும் நிலை ஏற்படும். மெகா உணவுப் பூங்கா மட்டுமின்றி, அதன் தொடர்புடைய சிறு சிறு உணவுப்பூங்காக்களும் எதிர்காலங்களில் உருவாகும் வாய்ப்புகள் உண்டு. வேளாண் பொருட்களை கொள்முதல் செய்தல், ஏற்றுமதி செய்தல், பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல், விற்பனை செய்தல், சந்தைப்படுத்துதல் என பல்வேறு துணை தொழில் வாய்ப்புகளும் பெருகும்.
பொருளாதாரத்தை மேம்படுத்தும் உணவு பதப்படுத்துதல் துறை
விவசாயிகள் சாகுபடி செய்யும் வேளாண் விளை பொருட்களுக்கு, நியாயமான விலை கிடைக்கும் வரை பாதுகாத்து வைத்திருக்க கிடங்கு வசதியில்லை. எனவே, உற்பத்தியானதும் கிடைத்த விலைக்கு விற்கின்றனர். குறிப்பாக, பழங்கள், மலர்கள், காய்கறிகள் போன்றவற்றை நீண்ட நாட்கள் பாதுகாக்க குளிர்பதன கிடங்கு வசதி அவசியம்.
ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதற்கான வாய்ப்பு இல்லாத நிலை இருக்கிறது. தற்போது, மிகப்பெரிய அளவில் உருவாகும் மெகா உணவுப் பூங்காவில் ஒரே நேரத்தில், 5 ஆயிரம் மெட்ரிக் டன் வேளாண் உணவு பொருட்களை, குளிர் பதனக்கிடங்கில் பாதுகாக்க வசதி உள்ளது. தேவையான அதிகபட்ச நாட்கள் வரை பாதுகாக்கலாம். அதோடு, சர்வதேச தரத்தில் உள் கட்டமைப்பு வசதியிருப்பதால், வேளாண் உணவுப் பொருட்கள் கெட்டுவிடாது. எனவே, நியாயமான அல்லது கட்டுப்படியான விலை கிடைக்கும் வரை அவற்றை பாதுகாத்து விற்பனை செய்யும் வாய்ப்பு விவசாயிகளுக்கு நேரடியாக ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் பொருளாளதாரம் மேம்பட இத்திட்டம் உதவிகரமாக அமையும்.
மதிப்புக் கூட்டுவதால் ஏற்றுமதி வாய்ப்பு
மணிலா, வாழை, சிறுதானியங்களை உற்பத்தி நிலையிேலயே விற்பனை செய்தால், குறைந்த விலைக்கே போகும். ஆனால், அவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருட்களாக மாற்றும்போது, கூடுதல் விலை கிடைக்கும். ஏற்றுமதிக்கான வாய்ப்பும் உருவாகும். அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. சென்னை பெருநகரின் பால் தேவையை பூர்த்தி செய்வதில் இந்த மாவட்டம் முக்கிய இடத்தில் உள்ளது.
எனவே, பால் தொடர்பான பொருட்களை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்யும்போது, பன்மடங்கு லாபம் கிடைக்கிறது. குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில், வரகு, சாமை, தினை, கேழ்வரகு, கம்பு, சோளம் உள்ளிட்ட சிறுதானியங்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. அதிலும், ஜவ்வாதுமலை சாமைக்கு பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. மேலும், திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர், போளூர் உள்ளிட்ட பகுதிகளில் மலர் சாகுபடி குறிப்பிட்ட அளவில் நடக்கிறது. அதனால், உணவுப் பூங்காவை பயன்படுத்தி, சிறுதானியங்களையும், பால் பொருட்களையும், மலர்களையும் பதப்படுத்தி, மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்மூலம், தொழில்முனைவோர் பயன்பெறுவதுடன், விவசாயிகளுக்கும் கூடுதல் லாபம் கிடைக்கும்.