துபாயில் கொரோனாவால் இறந்தவரின் அஸ்தி; இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மகனிடம் ஒப்படைத்த கேரள பெண்!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த குழிச்சல் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (44). இவரின் மனைவி லதா புஷ்பம் 2012-ல் ஒரு விபத்தில் உயிரிழந்தார். இவர்களுக்கு புக்லீன் ரிக்ஸி (22) என்ற மகளும், அக்லீன் ரகுல் (20) என்ற மகனும் உள்ளனர். ராஜ்குமார் ஐக்கிய அரபு நாட்டில் வேலைசெய்துவந்தார். இதற்கிடையே கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராஜ்குமார் உயிரிழந்தார். கோவிட் நெறிமுறையின்படி, கொரோனாவால் இறந்தவர்கள் உடலை வீட்டிற்கு கொண்டு வர முடியாததால் அரபு நாட்டிலேயே ராஜ்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது. தகனம் செய்யப்பட்ட அஸ்தி அஜ்மானில் உள்ள கலீஃபா மருத்துவமனையில் வைக்கப்பட்டது. தந்தையை கடைசியாகப் பார்க்க இயலாத ராஜ்குமாரின் இரண்டு பிள்ளைகளும் அவரது அஸ்தியை பெற விரும்பினர்.

கொரோனாவில் உயிரிழந்த ராஜேந்திரன்

இதற்காக ராஜ்குமாரின் நண்பரான கோட்டயத்தைச் சேர்ந்த சிஜோ என்பவரை தொடர்பு கொண்டு பிள்ளைகள் உதவி கேட்டனர். சிஜோ மருத்துவமனைக்குச் சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அஸ்தியை பெற்று வாங்கி, துபாயில் உள்ள தனது இல்லத்தில் வைத்திருந்தார். அந்நாட்டின் விதிமுறைகள்படி அஸ்தியை இந்தியா கொண்டுவர இரண்டு ஆண்டுகளாக முயன்று வந்தனர். பல்வேறு காரணங்களால் அஸ்தியை இந்தியாவிற்கு கொண்டு வர காலதாமதம் ஆனது. இதற்கிடையில், கோவிட் நெருக்கடியால் சிஜோ ஒரு வருடமாக வேலையை இழந்தார்.

இந்நிலையில் மறைந்த ராஜ் குமாரின் பிள்ளைகள் அடிக்கடி சிஜோவை தொடர்பு கொண்டு தங்கள் தந்தையின் நினைவுகள் அடங்கிய அஸ்தி பத்திரமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தனர். ஆனால் சிஜோவோ தனது நண்பரின் அஸ்தியை, தனது மனைவி மற்றும் மகனுக்கு தெரியாமல் தனது வீட்டில் மறைத்து வைத்திருந்தாராம். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சிஜோ தன் மனைவி மற்றும் மகனை சொந்த ஊரான கோட்டயத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து சிஜோ தன் நண்பரின் அஸ்தியை இந்தியா அனுப்ப பல்வேறு சமூக ஆர்வலர்களின் உதவியை நாடினார்.

அஸ்தியை பெற்றுக்கொண்ட ராஜ்குமாரின் மகன்

இது குறித்து துபாய் நண்பர்கள் அதிகம் உள்ள வாட்ஸ்ஆப் குழுக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சிஜோ உதவி கேட்டுள்ளார். முகநூல் பதிவை கவனித்த கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த, துபாயில் மருத்துவத் துறையில் பணியாற்றும் சமூக சேவகியுமான தாஹிரா அஸ்தியை பிள்ளைகளிடம் ஒப்படைக்க உதவி செய்ய முன் வந்தார். அதற்காக தூதரகம் மூலம் மேற்கொள்ள வேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை செய்தார் தாஹிரா.

இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் மதியம் அஸ்தியுடன் விமானத்தில் திருவனந்தபுரம் வந்தார் தாஹிரா. பின்னர் திருவனந்தபுரத்தில் இருந்து அருமனையில் உள்ள ராஜ்குமாரின் வீட்டிற்கு வந்தார். இரண்டு ஆண்டுகளாக தனது தந்தையின் அஸ்தியை எதிர்பார்த்து காத்திருந்த பிள்ளைகளிடம் அஸ்தியை ஒப்படைத்தார் தாஹிரா. அஸ்தியை பெற்றுக்கொண்ட ராஜ்குமாரின் குழந்தைகள் தங்களது தாயின் கல்லறை அருகே அவரது அஸ்தியை அடக்கம் செய்தனர். தந்தையின் அஸ்தியை துபாயில் இருந்து கொண்டுவந்து சேர்த்த தாஹிரா-வுக்கு புக்லீன் ரிக்ஸியும், அக்லீன் ரகுலும் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினர். அஸ்தியை ஒப்படைத்த தாஹிரா, திருவனந்தபுரம் விமானத்தில் இருந்து மீண்டும் துபாய் சென்றார்.

கொரோனாவில் இறந்தவரின் அஸ்தியை பிள்ளைகளிடம் ஒப்படைக்க முயற்சி எடுத்த தாஹிராவை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.