தேசியக் கொடியில் ‘மேட் இன் சைனா’: அன்றே சொன்ன ராகுல் காந்தி!

கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. 65 ஆவது சர்வதேச மாநாட்டில் காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் சபாநாயகர்கள் பங்கேற்றனர். இந்த மாநாடானது ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நடைபெற்றது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்தும் சபாநாயகர்கள் பங்கேற்றனர். காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் சபாநாயகர்களும் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் இடம்பெற்ற பேரணியில் இந்திய சபாநாயகர்கள் குழுவினர் கையில் ஏந்திச் சென்ற தேசியக் கொடிகள் அனைத்திலும், 100 சதவீதம் பாலிஸ்டர் எனும் வாசகத்தின் கீழ் ‘மேட் இன் சைனா’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தனியார் சேனல் ஒன்றுக்கு கனடாவிலிருந்து தொலைபேசி வாயிலாக பேசிய தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, “இந்தியாவின் பெருமை வெளிப்படுத்துவதற்காக பேரணியாக தேசியக் கொடிகளை ஏந்திக்கொண்டு சென்றோம். அந்த கொடிகளில் ‘மேட் இன் சைனா’ என இருந்தது, இதைக் கண்டு பாராளுமன்ற சபாநாயகரிடம் இந்திய கொடியை பிடிக்கிறோம் அதில் ‘மேட் இன் சைனா’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது என்று முறையிட்டோம். அவர் சிரித்துக் கொண்டார்; அவ்வளவுதான். ஆனால் சபாநாயகர்கள் அனைவருக்கும் வருத்தம் இருந்தது. சைனாவில் இருந்து தேசியக் கொடியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சிவகாசி, ஈரோடு, கரூர், நாமக்கல் பகுதிகளில் நிறைய பிரஸ்கள் இருக்கிறது. இரவு சொன்னால் காலையில் 100 கோடி கொடிகளை கூட தர முடியும். ஆனால் இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை.” என்று தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டது. “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் – சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா” என்ற பெயரில் சுதந்திர தினத்தை கொண்டாட மத்திய பாஜக அரசு அழைப்பு விடுத்திருந்தது. மேலும், மத்திய பாஜக தலைமையிலான அரசு ஹர் கர் திரங்கா என்ற பரப்புரையையும் முன்னெடுத்தது. அதன் ஒருபகுதியாக, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்; சமூக வலைதளங்களிலும் மூவர்ணக் கொடியை முகப்பு புகைப்படமாக மாற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதற்காக, தேசியக் கொடியை பாலிஸ்டரில் தயாரிக்கலாம் என்பன உள்ளிட்ட தேசியக் கொடி குறியீடு சட்டத்தில் சில மாற்றங்களையும் பாஜக அரசு கொண்டு வந்தது.

இதையடுத்து, சீன ஊடுருவல் முயற்சிகள் தொடர்பாக பிரதமர் மோடியை சாடி, அவர் சீனாவுடன் ‘மூவர்ண ஒப்பந்தம்’ செய்து கொண்டதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். “சீனாவுடன் மூவர்ண ஒப்பந்தம் செய்து கொண்ட பிரதமர், சீனாவின் ஊடுருவலை எப்படி தடுப்பார். நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க போராடுபவரே உண்மையான தேசபக்தர்.” என்று ராகுல் காந்தி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

சீனா நம் நாட்டின் எல்லைகளை ஆக்கிரமிக்கத் துணிந்துள்ளது. எட்டு ஆண்டுகளாக சீனாவுக்கு முன்னால் பிரதமர் பணிந்து நடக்கிறார் என குறிப்பிட்ட ராகுல் காந்தி, தேசியக் கொடிகள் தயாரிப்பதற்காக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாலிஸ்டரை நாம் ஏன் பயன்படுத்த வேண்டும்? எல்லையில் ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில், சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்வது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாட்டில் இந்திய தேசியக் கொடியில் ‘மேட் இன் சைனா’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.