தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கவில்லை – மத்திய அமைச்சர் தகவல்

ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, டெல்லி செல்லும் முன் சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஸ் சர்கார். அப்போது பேசிய அவர், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம்  தகுதிவாய்ந்த, திறமைமிக்க மாணவர்களை உருவாக்க முடியும் என கூறினார். அதற்காகவே தேசிய கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டதாகவும், தமிழ்நாட்டில் கல்வியின் தரம் நன்றாகவே இருப்பதாகவும் கூறினார்.

பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஸ் சர்கார், தேசிய கல்விக்கொள்கைக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் எழுத்து பூர்வமாக சமர்ப்பிக்கவில்லை என தெரிவித்தார். தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை என்றும், தேசிய கல்விக் கொள்கையில் சில முரண்பாடுகள் இருப்பதை தமிழ்நாடு அரசு கருத்தாக பதிவு செய்திருப்பதாகவும் கூறினார். தமிழ்நாடு அரசுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம், தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை நிச்சயம் அமல்படுத்துவோம் என்றும், தேசிய கல்விக்கொள்கை அமலாக்கம் தமிழ்நாடு அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறினார். 

உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையில் (GER), தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடத்தில் உள்ள நிலையில், வெறும் கல்வியறியும், உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையுமே (GER) தரத்தை தந்துவிடாது என்று கூறினார். புரிந்துகொள்ளும் திறன், கற்றல் வெளிப்பாடு, வேலைவாய்ப்புக்கேற்ற படிப்பு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் தான் உண்மையான தரத்தை வெளிக்கொணரும் என்றும் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஸ் சர்கார் விளக்கமளித்துள்ளார்.

மும்மொழிக்கொள்கையை தேசிய கல்விக்கொள்கை வலியுறுத்தும் நிலையில், மூன்றாவது மொழி என்பது இந்தி உட்பட எந்த மொழியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். எந்த மொழியையும் தேசிய கல்விக்கொள்கை திணிக்கவில்லை என மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஸ் சர்கார் விளக்கமளித்தார். மாநிலங்கள் அவரவர் விருப்பத்துக்கேற்ப கல்விக்கொள்கைகளை வடிவமைத்துக்கொள்வதாக பேசிய மத்திய அமைச்சர் சுபாஸ் சர்கார், ஆனால் அது தரமானதா என்பதை ஆராய வேண்டும்  என பேசினார். 

தேசிய அளவில் ஒரு தரமான கல்விக்கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு தேர்வுகள் பொதுத் தேர்வுகளாக வைக்கப்படுவதன் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயர்வானதாக இருக்கும். மாணவர்களின் கல்வித் தரத்தை எதை வைத்து நிர்ணயம் செய்வீர்கள் என்ற கேள்விக்கு எத்தனை பேர் பாஸ் ஆகிறார்கள், எத்தனை மதிப்பெண் பெறுகிறார்கள் என்பதை வைத்து  அவர்களுக்கு எந்த மாதிரியான கல்வியைக் கொடுக்கலாம் என முடிவெடுக்கமுடியும். புதிய கல்விக்கொள்கை குறித்து மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இடையே கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.