நடிகை சோனாலி வழக்கில் உணவு விடுதி உரிமையாளர் உட்பட மேலும் 2 பேரை கோவா போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவா மாநிலத்தில் நடிகை சோனாலி போகத் (வயது 42) மர்ம மரணம் அடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க. மகளிர் அணி முன்னாள் தேசிய துணை தலைவர், தேசிய செயல் குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ள அவர், 2019 ஆம் ஆண்டு நடந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு குல்தீப் பிஷ்னோயிடம் தோல்வி கண்டார்.
பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளில் தனது வீடியோக்களை வெளியிட்டு அதிக பார்வையாளர்களையும் பெற்றுள்ளார். 2020-ம் ஆண்டிற்கான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார்.
இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்ற சோனாலி போகத்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என தெரிவித்தனர்.
நடிகை சோனாலியின் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், சோனாலி போகத் மரணத்தில் மர்ம இருப்பதாக செய்திகள் உலா வந்தன. இதைத் தொடர்ந்து, கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் குடும்பத்தினர் ஒப்புதலுக்கு பின், அவரது பிரேத பரிசோதனை கடந்த வியாழக்கிழமை நடந்தது. அதில், நடிகை சோனாலி போகத்தின் உடலில் காயங்களுக்கான அடையாளங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில், சோனாலியுடன் சம்பவத்தன்று இருந்த சுதீர் சங்வான் மற்றும் சுக்வீந்தர் வாசி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், உணவு விடுதி உரிமையாளர் மற்றும் சந்தேகத்திற்குரிய வகையிலான போதை பொருள் கடத்தல்காரர் என இருவரை கோவா போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
அந்நபர், பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான மறைந்த நடிகை சோனாலியின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள 2 பேருக்கு போதை பொருட்களை வினியோகித்து உள்ளார் என கூறப்படுகிறது. இதன்படி, தத்தா பிரசாத் காவங்கர் என்ற அந்த நபரை அஞ்சுனா பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கில் குற்றவாளிகளான இருவரும், தத்தா பிரசாத்திடம் இருந்து போதை பொருட்களை வாங்கினோம் என்று வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, கர்லீஸ் என்ற பெயரிலான உணவு விடுதியின் உரிமையாளர் எட்வின் நூனஸ் என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இதுவரை மொத்தம் நான்கு பேர் நடிகை சோனாலி போகத் மரண விவகாரத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.