சென்னை: இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதித் தேர்வு முடிவுகள் செப். 7-ம் தேதி வெளியாகும் என்று தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.
நம் நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்திவருகிறது.
நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 497 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 3,570 மையங்களில் கடந்த ஜூலை 17-ம்தேதி நடத்தப்பட்டது.
இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். நீட் தேர்வு முடிவுகள் ஜூலை 21-ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், தேர்வு முடிவு வெளியாகாததால் மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் செப். 7-ம் தேதி வெளியாகும் என்று என்டிஏ அறிவித்துள்ளது. இதுகுறித்து என்டிஏ நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
நீட் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு, தேர்வர்களின் ஓஎம்ஆர் விடைத்தாள் நகல்கள் ஆக. 30-ம் தேதி வெளியாகும். இவற்றை https://neet.nta.nic.inஎன்ற தளத்தில் இருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஓஎம்ஆர் விடைத்தாள் நகல், தேர்வர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்படும்.
விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், உரிய ஆதாரங்களுடன் ரூ.200 கட்டணம் செலுத்தி விவரங்களை தெரிவிக்கலாம். இதைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகள் செப். 7-ம் தேதி வெளியிடப்படும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நீட் தேர்வு முடிவு வெளியாகாததால், தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நீட் முடிவுகள் வெளியான 2 நாட்களுக்கு பிறகு, பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கும் என அமைச்சர் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.