சேலம் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரியும் பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் 994 நிரந்தர தூய்மை பணியாளர்களும், 1,166 சுய உதவிக் குழு தூய்மை பணியாளர்களும் மொத்தமாக 2,160 பேருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஆனால் சேலம் திமுக எம்.பி எஸ்.ஆர் பார்த்திபன் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து எம்.பி. எஸ்.ஆர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சுயமரியாதை என் உயிருக்கு மேலானது. அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் எம்.பி-க்கு அழைப்பு கொடுக்கக்கூடாது. அதையும் மீறி அதிகாரிகள் அழைப்பு கொடுத்தால், அவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.
ஊழல் இல்லாத நேர்மையான என் செயல்பாடுகளை சேலம் மக்கள், கழகத் தோழர்கள், நிர்வாகிகள் நன்கு அறிவார்கள். ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு நான் ஒரு எம்.பி., மக்கள் பணிகளை செய்ய விடாமல் தடுப்பது சட்டவிரோதமானது. சேலம் மாநகராட்சி கமிஷனர், நான் ஏதோ எதிர்க்கட்சி எம்.பி, என்று நினைக்கிறார். மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறார். என்னை புறக்கணிப்பது எனக்கு வாக்களித்த 20 லட்சம் மக்களையும் புறக்கணிப்பதற்கு சமம். நான் போராட்டக்காரன் என்பதனை அனைவரும் அறிவார்கள். இதை சம்பந்தப்பட்டவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனிடம் பேசிய போது, “சமீபத்தில் சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரிடம் விருது வாங்கினோம். இதனை சிறப்பிக்கும் விதமாக மாநகராட்சியின் கடை கோடி ஊழியர்கள் ஆன தூய்மை பணியாளர்களுக்கு எனது சொந்த பணத்தை கொண்டு வேட்டி, புடவை எடுத்துக் கொடுத்து சிறப்பித்தேன். இது அரசு நிகழ்ச்சி அல்ல, இதற்கு எம்.பி-ஐ கூப்பிட வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அப்படி இருக்கும்போது எம்.பி இது மாதிரியான செய்திகளை வெளியில் பரப்பியது வருத்தத்தை அளிக்கிறது. மேலும் அவரே நேற்று மாலை வருந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நடந்த சம்பவத்தை பற்றி விளக்கம் அளித்துள்ளார். இதில் எங்கள் மீது எந்த தவறும் இல்லை” என்றார்.
பின்னர் எம்.பி பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சேலம் மாநகராட்சியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அழைப்பு தெரிவிக்கப்படும் என்பதனை வரவேற்கிறேன். நன்றி, சேலம் மாநகராட்சி கமிஷனர் அவர்கள் சிறப்பாக செயல்படக் கூடியவர். எல்லோருடைய நோக்கமும் மக்களுக்கு சிறந்த சேவையை கொடுப்பதுதான்.” என்றார்.