‘என் உடலில் கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை போராடுவேன்’ என சூளுரைத்துள்ளார் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்.
ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில், முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில் சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தனது பதவியை தவறாக பயன்படுத்தி, சுரங்க ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை தானே பெற்றுக் கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பாஜக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்தது.
இதுதொடர்பாக ஹேமந்த் சோரன், பாஜக தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் தனது முடிவை சீலிட்ட உறையில் ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பாய்ஸுக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைத்தது. அதில் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை தகுதிநீக்கம் செய்வது குறித்து ஆளுநர் இன்று (சனிக்கிழமை) முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமது அரசை சீர்குலைக்க ‘தீய சக்திகள்’ முயற்சிப்பதாக ஹேமந்த் சோரன் விமர்சித்துள்ளார். லதேஹரில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஹேமந்த் சோரன், ”எங்களுடன் அரசியல் ரீதியாக போட்டியிட முடியாமல் விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி மோதுகின்றனர். அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகளை பயன்படுத்தி எங்கள் அரசை சீர்குலைக்கிறார்கள். ஆனால் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இந்த ஆணையை வழங்கியுள்ளது எங்கள் எதிர்ப்பாளர்களே தவிர, மக்கள் அல்ல.
கொரோனா காரணமாக இரு ஆண்டுகளாக முடங்கிக்கிடந்த பொருளாதாரம், இப்போது வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ள நேரத்தில், தீய சக்திகள் அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றன. நான் எனது மக்களுக்காக உழைக்கிறேன். அதை நீங்கள் தடுக்க முடியாது. நான் ஒரு பழங்குடியினரின் மகன். பழங்குடியினரின் மரபணுவில் பயம் என்பதே கிடையாது. என் உடலில் கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை போராடுவேன்” என்று அவர் கூறினார்.
இதையும் படிக்க: ‘ராகுல் காந்தியின் குழந்தைத்தனம்’- விரிவான கடிதத்தோடு விலகினார் குலாம் நபி ஆசாத்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM