ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், தனது கட்சி எம்.எல்.ஏக்களை 3 பேருந்துகளில் அவசரமாக சொகுசு விடுதிக்கு அழைத்து சென்றுள்ளதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருப்பவர் ஹேமந்த் சோரன். கடந்த ஆண்டு இவர் அரசு ஒப்பந்தமான சுரங்க ஒதுக்கீடு ஒன்றை தன் பெயரிலேயே ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தன் பதவியை தவறாக பயன்படுத்தி இந்த ஒப்பந்தம் செய்துள்ளதாக பாஜக அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் பாஜக மூத்த தலைவர் ஒருவர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திலும் புகார் தெரிவித்தார்.
பதவி பறிபோகும் அபாயம்
அதில் ஹேம்ந்த் சோரன் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளார் என்றும், எனவே அவரை எம். எல். ஏ பதவியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிடும் படியும் கூறியிருந்தார். இது தொடர்பாக இருதரப்பிடமும் தேர்தல் ஆணையம் விசாரித்து வந்த நிலையில், இறுதியாக இது குறித்த கோப்பினை அம்மாநில கவர்னருக்கு அனுப்பியுள்ளது. கவர்னர் விரைவில் இது குறித்து அரசாணை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், எப்படியும் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன.
அடுத்த நடவடிக்கைகள் என்ன?
இதனால் பதவி பறிபோகும் அச்சம் ஏற்பட்டுள்ளதால் ஹேமந்த் சோரன் சிக்கலில் தவித்து வருகிறார். இதன் காரணமாக தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எப்படி செய்யவேண்டும் என்பதற்காக அவர் பலரிடம் ஆலோசனை கேட்டு வருகிறார். இதற்கிடையே நேற்று ஹேமந்த் சோரன் அவசரமாக கட்சி எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் கவர்னரின் முடிவுக்கு பின்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
சொகுசு விடுதியில் எம்.எல்.ஏக்கள்
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஹேமந்த் சோரன் தனது எம்.எல்.ஏக்களை அவசரமாக 3 பேருந்துகளில் அழைத்து சென்றுள்ளார். தற்போது, தலைநகர் ராஞ்சியில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள கந்தி நகரில் உள்ள சொகுசு விடுதியில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. எம்.எல்.ஏக்கள் லக்கேஜ்களுடன் பேருந்துகளில் ஏறிச்செல்லும் காட்சிகள் வெளியாகின. எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்க்கும் முயற்சி நடைபெறலாம் என்று அச்சத்தில் ஹேமந்த் சோரன் எம்.எல்.ஏக்களை பாதுகாக்க தொடங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
சத்தீஸ்காருக்கு அழைத்து செல்லப்படலாம்
3 பேருந்துகளில் அழைத்து செல்லப்படும் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் முதலில் கந்தி நகரில் தங்க வைக்கப்பட்டாலும் அங்கிருந்து மேற்கு வங்காளம் அல்லது சத்தீஷ்கருக்கு அழைத்து செல்லப்படலாம் என்று ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன. 82 உறுப்பினர்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சிக்கு 30 எம்எல்ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 17 உறுப்பினர்களும் உள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான பாஜக.வுக்கு 25 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.