பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த 12 கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அந்தப் பகுதி மக்களை நேரில் சந்தித்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியிருப்பது அரசியலில் பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
பரந்தூரில் விமான நிலையம்:
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் தேர்வாகியின்றன. இந்த புதிய விமான நிலையம் சுமார் 4,751 ஏக்கர் பரப்பளவில், இரண்டு ஓடுதளங்கள், விமானநிலைய முனையங்கள், இணைப்புப்பாதைகள், விமானங்கள் நிறுத்துமிடம், சரக்குகளைக் கையாளும் முனையம், விமான பராமரிப்பு மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் சுமார் 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாக அமைக்கப்பட உள்ளது. சுமார் 20,000 கோடி ரூபாய் உத்தேச மதிப்பீட்டில் தொடங்கப்படவுள்ள இந்த திட்டத்தை செயல்படுத்துவது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான படிகட்டு, 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற குறிக்கோளை எட்டுவதற்கான மற்றொரு மைல் கல் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
எதிர்ப்பு தெரிவிக்கும் 12 கிராம மக்கள்:
அந்த நிலையில், `விவசாய நிலங்களையும், குடியிருக்கும் வீடுகளையும் அழித்துவிட்டு விமான நிலையம் கட்டுவதுதான் வளர்ச்சியா?” எனக்கேட்டு திட்டத்துக்கு எதிராக பாதிக்கப்படவுள்ள 12 கிராம மக்கள் போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தும், கருப்புக்கொடி போராட்டம், பேரணிகளை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். மேலும், அமைச்சர்கள் எ.வ.வேலும், தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தையும் கிராம மக்கள் புறக்கணித்திருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து, ஶ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு,“சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படுகிறது. விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு இருக்கதான் செய்யும். இருந்தாலும் வழிகாட்டு நெறிமுறை பின்பற்றப்பட்டு விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும்” என உறுதி தெரிவித்திருக்கிறார். அதேபோல, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாத இந்த புதிய விமான நிலையம் அமைக்க, மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் மக்களின் மறுவாழ்வு, மீள்குடியேற்றத்திற்கும், கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கும் சந்தை விலையைவிட கூடுதலாக மிகவும் திருப்திகரமான இழப்பீட்டை வழங்குவோம்” என தெரிவித்தார்.
விவகாரத்தைக் கையிலெடுத்த அன்புமணி ராமதாஸ்:
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த விவகாரத்தை மிகத்தீவிரமாக கையிலெடுத்திருக்கிறார். குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி காஞ்சிபுரத்திலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பான மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தை பா.ம.க சார்பில் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், அக்கம்மாபுரம், வளத்தூர், மேல் பொடவூர், தண்டலம், மடப்புரம், இடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், சிங்கிலி பாடி உள்ளிட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள், தங்களின் கோரிக்கைகள் குறித்த கருத்துக்களை அன்புமணியிடம் தெரிவித்தனர்.
எந்த அடிப்படையில் பரந்தூரை தேர்வு செய்தார்கள்..?
இதைத்தொடர்ந்து பேசிய அன்புமணி, “சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைய எந்த அடிப்படையில் இந்த இடம் தேர்வு செய்தார்கள் என்பது தெரியவில்லை. தமிழக அரசின் அறிவிப்பு தற்போது வரை அறிவிப்பாக மட்டுமே உள்ளது. இந்த திட்டத்தை எப்படி செய்யப் போகிறார்கள்? அரசு செய்யப் போகிறதா அல்லது தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து செய்ய போகிறார்களா.. இங்கே நிலத்தை எடுத்தால், இங்கே வசிக்கும் மக்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரம் என்ன? வேலைவாய்ப்பு என்ன? அவர்களுக்கான மாற்று இருப்பிடம் எங்கே? போன்ற பல கேள்விகள் எழுகிறது. ஆனால் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைகளை தெரிந்து கொள்ள நாம் அரசிடம் சென்று பேசவேண்டிய அவசியம் இருக்கிறது.
விவசாயத்தை அழித்துதான் வளர்ச்சியா?
வளர்ச்சி அவசியமானது, வளர்ச்சி நமக்கு தேவைதான் ஆனால் விவசாயத்தையும் நீர்நிலைகளையும் அழித்து வரும் வளர்ச்சியை நாங்கள் எதிர்க்கிறோம். விவசாயத்தை அழித்து கட்டுமானத்தை கொண்டு வருவதுதான் வளர்ச்சி என அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அது வளர்ச்சியில்லை. வளர்ச்சி என்பது கட்டுமானங்களும் வளர வேண்டும். அதே சமயம் விவசாயமும் வளர வேண்டும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல், நீர் நிலைகளை காத்து, நீர் மேலாண்மை திட்டங்களை வகுத்து, விவசாயத்தை செழிக்க வைத்துக்கொண்டே, வளர்ச்சிக்கான திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.
சென்னைக்கு 2-வது விமான நிலையம் தேவைதான்! ஆனால்…
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் நிச்சயமாகத் தேவை. அது சம்மந்தமாக நானே பல அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறேன். ஆனால், சென்னையிலேயே உப்பளம் போன்று, பல்வேறு பகுதிகளில் அரசு நிலங்களே இருக்கின்றன. அங்கெல்லாம் தேர்வு செய்யாமல் இந்த இடத்தை ஏன் தேர்வு செய்தார்கள் என்பது குறித்து நாங்கள் அமைக்கப்போகும் குழு ஆய்வு செய்த பிறகுதான் தெரிய வரும்.
ஜி.கே. மணி தலைமையில் ஆய்வுக்குழு:
முதல் கட்டமாக, பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே. மணி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அந்தக் குழு 12 கிராமங்களுக்கும் சென்று, அங்குள்ள நீர்நிலைகள், விவசாய நிலங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யும். அதன்பிறகு முன்னர் விமான நிலையம் அமைப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்ட நான்கு இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளும். அதன்பின்னர், ஏன் பரந்தூர் இடத்தை தேர்வு செய்தார்கள் என குழு கொடுக்கும் அறிக்கையை தொடர்ந்து, அரசிடம் கலந்தாலோசித்து பா.ம.க-வின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்று தெரிவிப்போம்!” எனக் கூறியிருக்கிறார்.
பரந்தூர் விவகாரம் மட்டுமல்லாமல், தற்போது கொசஸ்தலை ஆற்றில் ஆந்திரா அணை கட்டும் விவகாரத்தையும் அன்புமணி கையிலெடுத்திருக்கிறார். கொசஸ்தலை ஆற்றில் புதிய அணைகள் கட்டப்படுவதை கைவிட வலியுறுத்தியும், அதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளக்கோரியும் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரத்தில், வரும் 30-ம் தேதி பா.ம.க சார்பில் தானே தலைமையேற்று மாபெரும் அறப்போராட்டத்தை நடத்தவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
பா.ம.க தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவிரி உபரி நீரை தருமபுரி மாவட்ட ஏரிகள், குளங்களுக்கு நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து தற்போது பரந்தூர் விவகாரத்தை கையிலெடுத்திருக்கிறார். அடுத்து கொசஸ்தலை அணை விவகாரம் குறித்து அறப்போராட்டம் நடத்தவிருக்கிறார். அடுத்தடுத்து விவசாயம் சார்ந்த பிரச்னைகளை தீவிரமாகக் கையிலெடுப்பதன் மூலம், தமிழகத்தில் குறிப்பாக வட மாவட்டங்களில் பா.ம.க இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கவும், எதிர்வரும் 2024 தேர்தலுக்கு ஓட்டுவங்கியாகவும் அமையும் என அன்புமணி ராமதாஸ் நம்புவதாக பா.ம.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.