‘பள்ளி மீது சந்தேகம் வர காரணம் இதுதான்’- முதல்வரை சந்தித்த மாணவியின் தாய் பேட்டி

பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் உரிய நீதி விசாரணை நடத்தி உண்மையை முதலமைச்சர் வெளிக் கொண்டு வருவார் என்ற முழு நம்பிக்கை உள்ளதாக கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார்.
கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் மரண வழக்கில் தாளாளர், செயலாளர் மற்றும் இரு பள்ளி ஆசிரியைகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சரை சந்தித்த மாணவியின் பெற்றோர், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். குறுகிய காலத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பிக்கப்படாமல் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
image
“தனியார் பள்ளி நிர்வாகிகள் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயமாக அவர்களை தமிழ்நாடு அரசு தப்பிக்க விடாமல் உரிய நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளி நிர்வாகம் தவறு செய்ததால்தான் சிசிடிவி காட்சிகளை தர மறுக்கிறது. உடற்கூராய்வு பரிசோதனை நடைபெற்ற ஆவணம் மட்டுமே தற்போதுவரை தங்களிடம் வழங்கப்பட்டுள்ளது. வீடியோ ஆதாரங்கள் இதுவரை எங்களிடம் வழங்கப்படவில்லை” என தெரிவித்துள்ளனர்.
image
மேலும் ஜிப்மர் மருத்துவமனையின் அறிக்கைகள் விவகாரம் தொடர்பாக எந்த ஆவணமும் எங்களிடம் வழங்கப்படவில்லை. மாணவி உடற்கூராய்வு செய்யப்பட்ட விவகாரத்தில் எங்களுக்கு முழு திருப்தி இல்லை.  நாங்கள் கேட்ட மருத்துவர்கள் வைத்து உடற்கூறு ஆய்வு செய்து இருந்தால் நாங்கள் திருப்தி அடைந்து இருப்போம்.
பள்ளி நிர்வாகம் சிசிடிவி காட்சியை பெற்றோர் ஆகிய எங்களை அழைத்து ஏன் காட்டவில்லை. அதனால் தான் எங்களுக்கு இதுவரையில் சந்தேகம் தொடர்கிறது. பள்ளி நிர்வாகம் அனைத்து தரப்பினருக்கும் அழுத்தம் கொடுத்து விசாரணையை நடத்த விடாமல் செய்கின்றனர் என்று கூறினார்.
image
மாணவி விவகாரத்தில் முதலமைச்சர் உண்மையை வெளிக்கொண்டு வந்து நீதி நிலை நாட்டுவார் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. பள்ளி நிர்வாகிகள் தற்காலிகமாகதான் ஜாமினில் வெளிவந்துள்ளனர். நிச்சயம் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறோம்.
மாணவியின் தோழிகள் என பள்ளி மாணவிகள் சிலர் ஆஜராகி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் உண்மையில் என் மகளின் தோழிகள் தானா என்பது எனக்கு தெரியவில்லை. அவர்கள் யார் என்ற பெயர் பட்டியல் வெளியில் வந்தால் தான் அவர்கள் உண்மையிலேயே என் மகளின் தோழிகளா என்பதை நான் சொல்ல முடியும்.
பள்ளி அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் சில அப்பாவி பள்ளி மாணவர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களை உடனடியாக விரைந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முதல்வரிடம் வைத்துள்ளதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.