பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது

இஸ்லாமாபாத்,

3.30 கோடி மக்கள் பாதிப்பு

பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கிய நிலையில் கடந்த 3 மாதங்களாக அங்கு கனமழை, வெளுத்து வாங்குகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத இந்த மழைப்பொழிவால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. வெள்ளத்தில் சிக்கி 6 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

கனமழை, வெள்ளத்தால் நாடு முழுவதும் சுமார் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர்.

மேலும் 45 பேர் பலி

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை 937 பேர் பலியானதாக நேற்று முன்தினம் அந்த நாட்டின் தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்தது.

இந்த நிலையில் நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் மேலும் 45 பேர் பலியாகினர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 113 பேருக்கு பலத்த காயங்களும், 1,456 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தை களமிறக்க…

மழை, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகனப்படுத்தியுள்ளஅரசு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது. இருந்த போதிலும் இடைவிடாத மழைப்பொழிவு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை கடினமாக்கியுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக ராணுவத்தை களமிறக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா கூறுகையில், “அவசரநிலையைச் சமாளிக்க சிவில் நிர்வாகத்துக்கு உதவியாக ராணுவத்தை வரவழைக்க அரசாங்கத்துக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பின் 245-வது பிரிவின் கீழ் துருப்புக்கள் அழைக்கப்பட்டுள்ளன.

எந்தெந்த மாகாணங்களில் எவ்வளவு துருப்புகளை களமிறக்க வேண்டும் என்பது தொடர்பாக அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்படும்” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.