இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் மழை காரணமாக இதுவரை நாடு முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதியிலிருந்து மக்களை மீட்க அந்நாட்டு அரசு ராணுவ உதவியை கோரியுள்ளது. இந்த பாதிப்புகளால் 1,456 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 982 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த கனமழை மேலும் ஒருவாரத்திற்கு தொடரும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்ததால் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும், ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதியில் இருந்து தற்போது வரை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட இடர்பாடுகளில் சிக்கி இதுவரை 937 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 343 பேர் குழந்தைகளும் அடங்குவர். அதிகபட்சமாக சிந்துவில் மட்டும் 306 பேர் உயிரிழந்துள்ளனர். பலுசிஸ்தானில் 234 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. மீட்பு படையினரும் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒருசில இடங்களில் வெள்ள மீட்பு பணிகளை ஆய்வு செய்யவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக பாகிஸ்தானில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள பெருத்த சேதங்களை கட்டுப்படுத்த இத்தகைய சூழல் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “பாகிஸ்தானில் எப்போது 3 முறையே பருவமழை பெய்யும். ஆனால் இந்த முறை 8ஐயும் கடந்து பெய்து வருகிறது” என்று கூறினார்.
இந்த கனமழையால் தாற்போது வரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்து உணவில்லாமல் தவித்து வருகின்றனர். வெள்ளம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் மோசமான வானிலை காரணமாக பலுசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டாவுக்குச் செல்லும் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. தொடர்ந்து மழை பெய்வது வருவதால் நிலைமை மோசமடைய தொடங்கியுள்ளது.
மேலும், இந்த பாதிப்புகளுக்காக ஐநா மத்திய அவசரக்கால நிதியம் ஏற்கனவே 3 மில்லியன் டாலர்களை ஒதுக்கியிருக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க கனமழை ஆகஸ்ட் 30 வரை தொடரும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுவரை 6.8 லட்சம் வீடுகள் மழைக்கு முற்றிலுமாக நாசமாகியுள்ளது. 3,000 கிமீ சாலைகள், சுமார் 150 பாலங்கள் என நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.