இஸ்லாமாபாத்-‘காஷ்மீரில் பாகிஸ்தான் கைதி மரணமடைந்தது குறித்து, உரிய விசாரணை நடத்த வேண்டும்’ என, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அலி உசேன், ஜம்மு – காஷ்மீருக்குள் நுழைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்றபோது, 2006ல் கைது செய்யப்பட்டு காஷ்மீரில் உள்ள கோட் பல்வால் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சமீபத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்திய சிறையில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அலி உசேன், ‘என்கவுன்டர்’ வாயிலாக கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இச்சம்பவத்தின் உண்மையான விபரங்களை இந்திய அரசு உடனடியாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
கைதியின் மரணத்திற்கான காரணத்தை நம்பகமான பிரேத பரிசோதனை அறிக்கை வாயிலாக தெரிவிக்க வேண்டும். இறந்தவரின் உடலை, அவரது குடும்பத்தினர் விருப்பப்படி உடனடியாக பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும்.மேலும், இந்திய காவலில் உள்ள மற்ற பாகிஸ்தான் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்தும் இந்தியா உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement